பவழக்காரத் தெருவில் ஒரு காலத்தில் பவழ வர்த்தகம் இருந்திருக்கும். இன்றைக்கு? சரித்திரத்தை எண்ணிக்கொண்டு தற்கால வீதி ஒன்றனுள் நுழைவது ஒரு அனுபவம். ‘சந்தைத் தெரு’ என்று சொல்ல முடியாதபடி வீடுகளும் கடைகளுமாக கலந்திருக்கின்றன.
வீடுகளைப் பொறுத்தவரை கலைநயத்தோடு கூடிய பழைய வீடுகளாக இருக்கின்றன. பர்மா வீடு என்ற பெயர்ப் பலகை தாங்கிய சத்திரம் போன்ற வீடு, நாட்டுக்கோட்டைச் செட்டியார் சத்திர வீடு, கிருஷ்ணர் கோயில், பஞ்ச பூதங்களில் காற்றுக்கான காளஹஸ்தி கோயில் போன்றவை இருந்தன. அகலமில்லாத சாலை என்பதை விட சாலையின் எல்லையில் வீடுகள் அல்லது கட்டடங்கள் செங்குத்தாகத் தொடங்கிவிட்டன. எனவே வாகனங்கள் நிறுத்த இடமின்றிச் சாலையின் இருபுறமும் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. கார் போன்ற பெரிய வாகனங்கள் உள்ளே சென்றுவர வசதி இல்லை. ஆனால் சைக்கிள் ரிக்ஷா தெருவில் சென்றது. ஒரு பெண்ணை அமரவைத்து வயதான மனிதர் மிதித்துக்கொண்டு சென்றார். மூன்று சக்கர சரக்கேற்றும் சைக்கிள்கள் நின்றுகொண்டிருந்தன. அது மாலை நேரம் என்பதால் மிதிப்பவர் அதன் மீது படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். தற்கால ஆட்டோகளும் நின்றுகொண்டிருந்தன.
Add Comment