அகலமாக இல்லாமல், உயரமாக இரண்டு அடுக்குடன் தலையில் முக்கோணத் தொப்பி கொண்ட வீடுகளை விக்டோரியா ஸ்டைல் வீடுகள் என்போம். இந்த வீடுகளுக்கு இடம் அளிப்பதற்காகவே உருவானது போல ஒரு கச்சிதமான தீவு. எட்டி நின்று பார்க்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. யோகாசனம் செய்வது போல அமர்ந்தாலே முழுத் தீவின் சுற்றளவையும் பார்க்கமுடியும். இந்தத் தீவின் நெருங்கிய நண்பர்கள், கணவன் மனைவி போல அடிக்கடி முட்டிக்கொள்ளும், சூரியனும், மூடுபனியும் . பெரும்பாலான நேரங்களில் இருவரும் ஒன்றாக இருந்தாலும், மூடுபனியின் ஆதிக்கத்தையே இத்தீவில் பரவலாக உணரமுடியும். இதில் ஆண் யார், பெண் யாரென்ற பஞ்சாயத்தை வாசகர்களிடம் விட்டுவிடலாம். இந்த அழகிய தீவில் உள்ள வீடுகள் ஹோட்டலாக செயல்பட்டு வருகின்றன. இந்த ஹோட்டலை முழுநேரம் பராமரிக்க ஒரு தம்பதியர் தேவை என்று அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.
செல்வந்தர்களின் வெகேஷன் வீடுகள் போன்ற பாணியில் உள்ள இந்தத் தீவு எங்கோ உலகத்தின் ஒரு மூலையில் கடலுக்குள் ஒளிந்திருக்கவில்லை. உலகப் புகழ் பெற்ற சான் பிரான்சிஸ்கோ நகருக்கு மிக அருகில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், தீவிலிருந்து சான் பிரான்சிஸ்கோ நகரின் ஸ்கைலைனை தினமும் ரசிக்க முடியும்.
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவின் வடக்குப் பகுதியில் அண்ணன் தம்பி போல இரண்டு தீவுகள் எதிர் எதிரே உள்ளன. இதைக் கிழக்கு மற்றும் மேற்கு சகோதரத் தீவுகள் (ஈஸ்ட் மற்றும் வெஸ்ட் பிரதர் தீவுகள்) என்று அழைப்பார்கள். அண்ணனுக்கு மட்டும் ஹீரோ பெயர் கார்த்திக், தம்பிக்கு வில்லன் பெயர் ரகுவரன் என்பதுபோல், கிழக்கு சகோதரத் தீவு சற்று பெரியது. அதில் கலங்கரை விளக்கம், வீடுகள் கொண்ட விளக்கு மாளிகை கட்டப்பட்டுள்ளது. மேற்கு சகோதரத் தீவு சிறியதாக வெறுமனே கிழக்கு சகோதரத் தீவைப் பொறாமையுடன் வேடிக்கை பார்ப்பது போலக் காட்சியளிக்கும்.














Add Comment