20. தேடுபொறித் தலைவன்
கூகுள் ஒரு தேடுபொறியாக அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று தசாப்தங்கள் நிறையவிருக்கின்றன. அது பெரிய நிறுவனமாக வளர்ந்து பெரிய உச்சங்களைத் தொட்டு, பல நுட்பங்களில் கைவைத்து விளையாடி, பெரிய நிறுவனங்களை வாங்கி, இன்று அசைக்க முடியாத இணைய நிறுவனமாக மாறியிருப்பதைப் படிப்படியாகப் பார்த்தோம். ஆனால் எந்த விதை இந்த விருட்சத்தை வளர்த்தோ, அந்த நோக்கமும் பெருங்கனிகளை இன்னமும் வாரிக்கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்க்கிறோம். ஆம். தேடுபொறிகளில் இன்றும் தலைவன் கூகுள்தான். இணையத் தேடலையே கூகுள் செய்து பார் என்றுதான் உலகம் பெயர் மாற்றி வைத்திருந்திருக்கிறது.
தங்கள் வீட்டில் எது தொலைந்தாலும் மீட்டுக்கொண்டு வரும் நாய்க்குட்டிகளுக்கு `கூகுள்` என்று பெயர் வைத்து மகிழ்கின்றனர். வீட்டிலேயே நன்கு படித்த அறிவாளியாக இருக்கும் அண்ணனையோ அக்காவையோ எங்கள் வீட்டின் கூகுள் இவன்/ள் என்று பெருமையாக விளிப்பதைக் காண்கிறோம். பெருநிறுவனங்கள், ஆரம்பக் கட்ட நுட்ப நிறுவனங்கள் யாவற்றின் மீட்டிங்குகளிலும் கூகுள் சர்ச் வளர்ந்த கதை பற்றிய ஒரு ப்ரசண்டேஷன் கூட வழங்கப்படாது இருப்பதில்லை. உலகில் செல்பேசி வைத்திருப்போர் அனைவரின் முகப்பிலும் வண்ணமயமான தனது இலச்சினையோடு, தேடுபொறியென்றால் முதலில் விரும்பி அழைக்கும் துணைவனாக நிரந்தரமான இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறது கூகுள் தேடுபொறி.
எப்படி இது சாத்தியமாயிற்று. இருபத்தேழு வருடங்களாகப் போட்டியின்றி உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருக்கிறது. சந்தையில் இருக்கும் எவரும் இவர்களின் தரத்தின் அருகில் கூட வரமுடியாமற்போனது.
Add Comment