தென் அமெரிக்காவிலுள்ள நாடு அர்ஜென்டினா. அதன் முன்னாள் பெண் அதிபரான கிறிஸ்டினா ஃபெர்னாண்டோவுக்கு ஊழல் காரணமாக ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவரது அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 72. அட, 72 வயதில் சிறைச்சாலையா? நமக்கே இந்தக் கேள்வி எழும்போது, அவருக்குத் தோன்றாதா என்ன. வயதைச் சாக்காகக் கொண்டு அவர் முறையிட்ட வீட்டுச்சிறை விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்டினா, சமூக வலைத்தளங்களில் ‘வீட்டுச்சிறை என்றால், நான் பால்கனி செல்ல முடியுமா? விளையாட்டாகக் கேட்கவில்லை. நிஜமாகவே எது செய்யலாம், செய்யக்கூடாது என்ற விளக்கம் வேண்டும்’ என்று நீதிமன்றத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். நியாயமான கேள்விதான். வீட்டுச்சிறை என்றால் என்ன?
வீட்டுச்சிறை என்பது புதிதல்ல. காலம் காலமாக நடப்பதுதான். நீதி மன்றத்தின் கட்டுப்பாட்டில் குற்றவாளி, அல்லது குற்றம் சாட்டப் பட்டவர்கள் அவர்களது வீட்டிலேயே சிறைத் தண்டனையை மேற்கொள்வதுதான் வீட்டுச்சிறை.
வீட்டுச்சிறையில் உள்ளவர்கள் அவரவர் வீடுகளில் தங்கிக்கொள்ளலாம். பிடித்த உணவு, நேரத்துக்குக் காபி, டீ சமோசா என்று வகையாக தின்னலாம். நெட்பிளிக்ஸ் பார்க்கவேண்டும் என்றாலும் பாதகம் இல்லை. ஆனால் இவர்களுடன் எப்பொழுதுமே ஓர் இயந்திரம் உடுத்தும் ஆடை போல ஒட்டிக்கொண்டேதான் இருக்க வேண்டும். தப்பித்தவறி வெளியில் கால் எடுத்து வைத்தால், மாட்டிக்கொள்வார்கள். இயந்திரத்தில் ஜிபிஎஸ் இருப்பதால், காட்டிக்கொடுத்து விடும். இவர்களுடன் குடும்பத்தாரும் உடன் தங்கிக்கொள்ளலாம். ஆனால் வீட்டுக்கு யாராவது வரவேண்டும் என்றால் முன்பதிவு செய்து உத்தரவு வாங்கிக்கொண்டு வரவேண்டும். அது குடும்பத்தினரைப் பார்க்க வேண்டுமானாலும் சரி.














Add Comment