தீபாவளியன்று காலை 11 மணி. நூற்றுக்கும் மேலானவர்கள் அந்தத் திரையரங்க வாசலில் இருந்தனர். தங்களுக்குப் பிடித்த படத்தோடு தீபாவளியைக் கொண்டாட வந்திருந்தனர். உடன் படம் பார்க்க வருபவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். இதில் பலர் ஒவ்வொரு வருடமும் வருபவர்கள். எவ்வளவு ஆண்டுகளாக இப்படிச் செய்கிறார்கள்?
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக. இடம்: மராத்தா மந்திர் திரையரங்கம் மும்பை. படம்: தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே.
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது இந்தத் திரையரங்கம். ஸ்டேஷனுக்கு வெளியில் வந்ததும் ‘மராத்தா மந்திருக்குச் செல்லும் வழி’ என்று அம்புக்குறியோடு ஒரு போர்டும் வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் இதே திரையரங்கில் முப்பது ஆண்டுகளாக இடைவெளியின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. அக்டோபர் 20, 1995 இல் துவங்கிய ஓட்டம் இன்று வரை தொடர்கிறது. காலை 11:30 மணி காட்சி மட்டும் கடந்த பல வருடங்களாக ஓடுகிறது. ஆயிரமாவது வாரம் முடிந்ததும் பெரிய விழா எடுக்கப்பட்டது. அதோடு இந்தப்படத்தை நிறுத்திக் கொள்கிறோம் என்று நிர்வாகம் அறிவித்து வெளியே போர்டும் வைத்து விட்டார்கள்.













Add Comment