3. கல்வி என்னும் கனவு
காந்தியை நாம் மகாத்மா என்கிறோம். நாம்மட்டுமில்லை, பெரிய தலைவர்கள், சிந்தனையாளர்களில் தொடங்கிப் பொதுமக்கள்வரை பலரும் அவரை அவ்வாறு உணர்ந்து அழைத்துள்ளார்கள். இன்றைக்கும் ‘மகாத்மா’ என்றால் நம் மனத்தில் தோன்றும் உருவம் காந்தியுடையதுதான்.
ஆனால், காந்தியின் இந்தப் பட்டம் உலகப் புகழ் பெறுவதற்கு முன்பாகவே அவர் கோகலேவை ‘மகாத்மா’ என்று பலமுறை அழைத்துள்ளார், ‘அறம் மனித உருவெடுத்து வந்ததைப்போன்றவர் அவர்’ என்று புகழ்ந்துள்ளார், ‘மேலை நாடுகளைச் சேர்ந்த டால்ஸ்டாய், ரஸ்கின் இருவரையும் மிகச் சிறந்த தத்துவ அறிஞர்களாக நான் மதிக்கிறேன். ஆனால், கோகலேவை அவர்களுக்கும் மேலாக நினைக்கிறேன்’ என்று பாராட்டியுள்ளார். இவ்வாறு காந்தி கோகலேவுக்குச் சூட்டிய புகழாரங்களைப் பட்டியலிடுவதென்றால் ஒரு தனி நூலே தேவைப்படும்.
இதையெல்லாம் படிக்கும்போது காந்தியைவிடக் கோகலே மிகவும் முதியவர் என்று நமக்குள் ஓர் எண்ணம் தோன்றலாம். ஆனால், அவர்கள் இருவரும் வெறும் மூன்றாண்டு இடைவெளியில் பிறந்தவர்கள். ஆனால், காந்தி தன்னுடைய அரசியல், சமூக அறிவைப் படியேறிச் சென்று பெற்றார் என்றால், கோகலே மின்னேணியில் ஜிவ்வென்று மேலேறியிருந்தார். அதாவது, தனக்குக் கிடைத்த தனித்துவமான வாழ்க்கை அனுபவங்களைப் பயன்படுத்திக்கொண்டு குறுகிய காலகட்டத்துக்குள் மிகப் பெரிய அனுபவத்தை உள்வாங்கிக்கொண்டிருந்தார், மக்களிடையில் பெரும் மதிப்பைச் சம்பாதித்துக்கொண்டிருந்தார்.
Add Comment