இந்தியாவும் பங்களாதேஷும் தத்தமது நாட்டில் இருக்கும் தூதரக அதிகாரிகளைக் கூப்பிட்டு மாறி மாறி அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முஜிபுர் ரஹ்மான் நினைவு இல்லத்தை இடித்து நொறுக்கி, ஆரம்பித்த இடத்திலேயே இருக்கிறோம் எனச் சொல்லாமல் சொல்கிறது பங்களாதேஷ்.
வன்முறை எதனால் ஆரம்பித்தது என்று குறிப்பாகச் சொல்வதற்கில்லை. குத்துமதிப்பாகச் சொல்வதென்றால் அவாமி லீக் ஆறு மாத அமைதிக்குப் பிறகு பிப்ரவரி முதல் தேதியில் இருந்து போராட்டங்களை நடத்தத் தயாரானது. அச்சடித்த நோட்டீஸ் விநியோகம் செய்வது, ஊர்வலம், பேரணி, பிப்ரவரி 18ஆம் தேதி தீவிர வேலைநிறுத்தம் என நாள்தோறும் திட்டங்களை அறிவித்து ஆரம்பித்தது. ஐந்தாம் தேதி ஹஸினா ஆன்லைன் மூலம் அவாமி லீக் தொண்டர்களிடம் பேசினார். அவர் பேசப்போகிறார் எனத் தெரிந்தபோதே அதை எதிர்த்து முஜிபுர் வீட்டை நோக்கிச் செல்ல பேஸ்புக் வழியாக அறைகூவல் விடுக்கப்பட்டது. அன்றிரவு அருங்காட்சியகமாக இருந்த முஜிபுர் வீட்டில் தீவைத்தார்கள்.
இரண்டு மணிவாக்கில் அனைவரும் கிளம்பிப் போய் குட்டித்தூக்கம் போட்டுவிட்டுத் திரும்ப ஐந்து மணியளவில் கூடினர். இந்த முறை புல்டோசர்களும் வந்தன. நினைவிடத்தைச் செங்கல் செங்கல்லாக உடைத்து எறிந்தனர். இன்னும் சில நினைவிடங்களும் குறி வைக்கப்பட்டன. நாட்டில் உள்ள நினைவிடங்களை அழிப்பதன் மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது. இதற்கெல்லாம், யூனுஸ் அரசு உடனடி நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
Add Comment