தமிழ்நாட்டைச் சேர்ந்த இருபத்தேழு மீனவர்களை மூன்று நாள்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கிறார்கள். பாக் ஜலசந்தி பகுதியில் அவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்தபோது இந்தக் கைதுச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. இதே போலக் கடந்த அக்டோபர் மாதம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் இப்போது வரை திரும்பவில்லை. மேற்படி இருபத்தேழு பேராவது கைதாகியிருக்கும் தகவல் வந்துள்ளது. இந்த நான்கு பேரின் நிலைமை என்னவென்று யாருக்கும் தெரியாது.
எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களை அண்டை நாட்டுக் கடற்படையினர் கைது செய்வது என்பது உலகெங்கும் எப்போதும் நடப்பதுதான். நமது மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது, மேற்கே அரபிக் கடல் என்றால் பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்வது காலம் காலமாக நடந்து வருவது. நமது கடற்படையினரும் இப்படி எல்லை தாண்டி வருவோரைக் கைது செய்வதுண்டு. இல்லவே இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.
Add Comment