183. பிறந்தது வங்காள தேசம்!
அமெரிக்க அதிபர் நிக்சனுடனான பேச்சுவார்த்தை இந்தியாவுக்குச் சாதகமாக இல்லாது போய்விட்டாலும், இந்திரா காந்தி சாதுர்யமாக ஒரு காரியம் செய்தார். வாஷிங்டன் தேசிய பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். நியூஸ் வீக் பத்திரிகைக்குப் பேட்டி அளித்தார்.
‘தினம் தினம் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு ஓடிவந்து தஞ்சம் புகும் அப்பாவி மக்களின் சோகமும் கஷ்டங்களும் என் மனதைப் பிழிகின்றன. பாக். அதிபர் ஜெனரல் யாஹியா கானுடன் பேசி, பிரச்சினைக்குத் தீர்வு காண்பது கனவிலும் சாத்தியமில்லை. மூடிய விரல்களோடு கை குலுக்க முடியுமா?’
‘என்னை ஒரு அண்டை நாட்டின் பிரதமர் என்று கூட மதிக்காமல் தரக்குறைவாகப் பேசுகிறார். அதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதற்கு இதுவே அத்தாட்சி!’ என்று அடித்துச் சொன்னார்.
அமெரிக்காவில் அறிவுஜீவிகள் மற்றும் சில முக்கியஸ்தர்களை ஒரு ‘கெட் டுகெதர்’ கூட்டத்துக்கு அழைத்துப் பேசினார்.
இந்திரா காந்தியின் அமெரிக்கத் தோழி டுரோதி. இந்திரா அமெரிக்கா வந்தால் வழக்கமாக ஒரு சில இசை, கலாசார நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வார். ஆனால் இந்த முறை ‘எனக்கு அவற்றை ரசிக்கும் மனநிலை இல்லை’ என்று சொல்லி விட்டார். சொல்லப்போனால், டுரோதிக்கு இதில் லேசான வருத்தம் கூட.















Add Comment