9. எது உன்னுடையது?
புத்தரின் சீடர்களில் ஒருவர் சுபூதி. பௌத்தத்தின் சூன்யக் கோட்பாட்டை முழுமையாகப் புரிந்து கொண்ட மிகச் சிலரில் ஒருவர். இவ்வுலகில் எதுவும் நிலைப்பதில்லை. உளப்பூர்வமான மற்றும் ஜடப்பூர்வமானவற்றுக்கு இடையிலான உறவு மட்டும் தான் நீடிக்கிறது என்று அவர் நம்பினார்.
ஒருநாள் சுபூதி சூன்யத்தின் ஆழத்தில் தன்னை இழந்து ஒரு மரத்தடியில் தியானத்தில் லயித்திருந்தார். அப்போது அவர் மீது மலர்கள் பொழிந்தன. தேவர்கள் பூமிக்கு இறங்கி வந்தனர். சூன்யம் பற்றிய உங்கள் பிரசங்கம் கேட்டு மகிழ்ந்தோம். உங்களைப் பாராட்ட வந்தோம் என்று கூறினர். ஆனால் சுபூதி ஒன்றும் சொல்லவில்லை.
தேவர்கள் மீண்டும் தாம் வந்த நோக்கத்தைச் சொன்னபோது, “நான் சூன்யத்தைப் பற்றியோ வெறுமையைப் பற்றியோ எதையும் பேசவே இல்லையே” என்றார் சுபூதி.
நீங்கள் வெறுமையைப் பற்றிப் பேசவே இல்லை. நாங்களும் சூன்யத்தைப் பற்றி எதுவும் கேட்கவே இல்லை. இது தான் உண்மையான வெறுமை நிலை என்று தேவர்கள் பதிலளித்தனர். தேவர்கள் இப்படிச் சொன்னதும் மீண்டும் ஆயிரமாயிரம் மலர்கள் சுபூதியின் மீது பொழிந்தன…
Add Comment