எப்போது, எங்கிருந்து அழுத்தம் வரும் என்று தெரியாத அளவுக்கு எட்டுத் திசைகளிலும் ‘பிரஷர் குக்கர்’ வாழ்க்கைதான் பணிச்சூழலில் நிலவியது. சுற்றியிருந்த நண்பர்கள் பலர் கழன்று கொண்டபோதும், சிலர் கழட்டிவிடப்பட்டபோதும் ஒவ்வொரு நாளும் திகில் படத்தின் கிளைமாக்ஸ் போலவே இருந்தது, இருக்கிறது.
ஐம்பது ஒப்பந்தங்களில் என் ஒருத்தியின் ஒப்பந்தம் மட்டும் நீட்டிக்கப்பட்டது என் உழைப்புக்குச் சான்று. இதனால் நாடு முழுவதும் தொழில்துறையில் குறிப்பிட்ட பகுதியில் ஆலோசனை வேண்டுவோருக்கு உரிய உதவி செய்தே ஆக வேண்டிய இடத்தில் இருக்கிறேன். மத்திய அரசை மட்டும் நம்பியிருக்காமல், இரண்டு முழுநேர வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு பார்த்தது ஒரு சவாலான அனுபவம். இந்த ஓயாத உழைப்பிற்கு மகுடம் வைத்தாற்போல, வெள்ளை மாளிகையில். ‘சிறந்த உழைப்பாளி’ என்ற உயரிய அங்கீகாரமும் எனக்குக் கிடைத்தது.
‘மெட்ராஸ் பேப்பர்’ இதழில் நாள்தோறும் ஒரு கட்டுரை என்ற இலக்கைச் சவாலாக ஏற்றுச் செயல்படுத்தினேன். ‘அதிகார நந்தி’ தொடர் எனக்கு மிகவும் நெருக்கமானது; அதில் இடம்பெற்ற நிகழ்வுகளோடு நான் வாழ்ந்திருக்கிறேன். நாள்தோறும் நேரம் தவறாமல் கட்டுரையை அனுப்பும் முயற்சியில் வென்றது எனக்கு மிகுந்த நிறைவைத் தந்தது.














Add Comment