காலம் என்னவோ எந்தவிதத் தடுப்புகளும் பிரிவுகளும் இல்லாமல் வற்றாத நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம், மாதம் வருடம் என்பதெல்லாம் நமக்காக நாம் ஏற்படுத்திய கணக்குதான். நான் தற்காலம் என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த நொடி கடந்த காலமாகி இருக்கும். நான் எதிர்காலமென நினைத்த நொடியில் நுழைந்துவிட்டிருப்பேன். ஆனாலும் நாமாகவே ஏற்படுத்திவிட்ட இந்தக் காலக் கணக்குகளில் ஒரு கால கட்டத்தில் என்ன செய்தோம் என அசை போடுவது நம்மைச் செம்மை படுத்திக் கொள்ள வழிகோலும்.
எனது தொழில் ரீதியாக அங்கீகாரமும் விருதுகளும் நிறைந்த ஆண்டுதான். நிறைய நிகழ்வுகளும் கல்வி எனும் ஏணியில் ஏறிய விளிம்புநிலை மனிதர்களின் சாதனைகளும் நிறைந்த ஆண்டு. அதற்கு நான் ஒரு கருவியாக இருந்தேன் என்பதே எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி.
எழுதும் பணியில் நான் என்னதான் செய்தேன் என்று பார்த்தால், மெட்ராஸ் பேப்பரில் வாரம் ஒன்று எனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு முறை அமெரிக்காவில் தேர்தல் நடக்கும் போதெல்லாம், இந்தியாவின் தேர்தலுடன் ஒப்பிட்டு பகடி செய்யும் பலர் உண்டு. அப்போதெல்லாம் விளக்கமாக எழுத வேண்டும் என நினைப்பது உண்டு. அதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
தேர்தல் குறித்து நான் எழுதிய கட்டுரைகள் இருநூறு ஆண்டு கால வரலாற்றை ஒட்டி எழுதப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளை ஒரு சேரப்படித்த போது இவை மக்களாட்சி என்ற மகத்தான சக்தியைத்தான் வெவ்வேறு தகவல்கள் கொண்டு சொல்லியிருக்கின்றன என்று புரியவைத்தன. அமெரிக்காவின் கட்சி முறைகளும் அதை ஒட்டிய வரலாறும் தெரிந்தன.
Add Comment