“நம்ம லட்சுமிக்கு எதாவது பண்ணனும்டா.”
அம்மா இதை நூறாவது முறையாகச் சொல்கிறாள். அவள் எப்பவும் இப்படித்தான். எதையாவது மனதில் வைத்துக்கொண்டு, சொல்லத் தெரியாமல் தவிப்பாள். இரண்டு வருடத்துக்கு ஒருமுறை நான் அமெரிக்காவிலிருந்து வந்து போகிறேன். ஒவ்வொரு முறையும் யாரையாவது கை காட்டுவாள்.
‘நம்ம ட்ரைவர் முருகன் பையனுக்கு அட்மிஷன் கிடைக்கலையாண்டா. நீ எதாவது செய்யேன்.’
‘பி பிளாக்ல இருக்காளே வசந்தி, அவ தங்கைக்கி அமெரிக்கால வரன் பார்த்திருக்காளாம். நீ கொஞ்சம் பையன பத்தி விஜாரிச்சு சொல்லேன்.’
‘அயர்ன் பண்றானே மணிகண்டன், கால்ல புண் வந்து ஆறவே இல்லையாம். உன் ஃபிரண்ட் எவனோ அப்பல்லோல டாக்டரா இருக்கானே, கூட்டிண்டு போறயா?’
இவ்வாறாக அவள் விண்ணப்பங்கள் மற்றவர்களுக்கானவை. தனக்கென்று எதுவும் கேட்கத் தெரியாது. அவள் கோபப்பட்டு நானும், அண்ணாவும் பார்ததேயில்லை. அவளின் அதிகபட்ச அதட்டலே, ‘டேய்’ தான். இன்று சின்னச் சின்ன விஷயங்களுக்காக நானும், மனைவியும் பொறுமையிழந்து சண்டையிடும்போது, அம்மா, அப்பாவை நினைத்துக் கொள்கிறேன். இவ்வளவுக்கும் சிறு வயதில் நானும், அண்ணாவும் நிறைய சேட்டை செய்திருக்கிறோம். சாமான்கள், ஜன்னல்கள் உடைவது குறைந்த பட்சம் என்றால், ரத்தகாயம் அதிக பட்சம்.
சரளமான நடை, சிறப்பான கதைக்கரு. அசத்தல்.
இக்கதைக்கு ஒற்றைக் கோட்டில் ஓவியம் வரைந்த புண்ணியாத்மாவையும் வியக்கிறேன். (Love எனும் எழுத்துக்களா அவை..?)