அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல அமெரிக்க ரிட்டர்ன் அரசியல் வாரிசுகளும் சினிமாக்களில் பிரபலம். ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அப்படி ஒருவர். நீண்டகால முதல்வர்கள் வரிசையில் ஜோதிபாசுவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். முதலிடமும் கண்ணுக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. ஒரு நாள் முதல்வர்கள் கூட இருக்கும் இந்தியாவில், மக்கள் மனதை வென்று கிட்டதட்ட கால் நூற்றாண்டாக ஆட்சியில் இருப்பவர்களைப் பார்க்கையில் யாரு சார் நீங்கல்லாம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?
இந்தியாவின் நீண்டகால முதல்வர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருப்பவர் ஜோதிபாசு. மேற்கு வங்க முன்னாள் முதல்வர். லண்டனுக்குப் படிக்கச் சென்றபோது கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இந்தியாவில் சி.பி.ஐ. மார்க்சிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவர். எமெர்ஜென்ஸிக்குப் பிறகு முதல்வரானார். போராட்டங்கள் நிறைந்த காலத்தில் மாநிலத்தில் அமைதியை நிறுவியவர். தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், வேலையற்றோர், விதவைகளுக்கான உதவித்தொகை, மூன்றடுக்குப் பஞ்சாயத்து முறை, கல்வித் துறை வளர்ச்சி, நிலச் சீர்த்திருத்த நடவடிக்கைகள்- இவை எல்லாம் ஜோதிபாசு ஆட்சிக்காலத்தில் அவர் சாதித்தவைகளுள் சில. தொழில்துறை வளர்ச்சியில் இவர் பார்வை பற்றிய முரண்பட்ட கருத்துகளும் உண்டு.
23 ஆண்டுகளுக்கும் மேல் முதல்வராக மக்கள் பணியாற்றியவர் தன் உடல்நிலையைக் காரணம் காட்டி 2000-ஆம் ஆண்டு பதவி விலகினார். அதன் பிறகும் அவருடைய கட்சியே மேலும் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தது. அவர் விலகாமல் இருந்திருந்தால் 33 ஆண்டுகளைக் கடந்து முதல்வராக இருந்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகி இருப்பார். எண்களில் பெருமை கொள்பவர் அல்ல ஜோதிபாசு. தனி நபராகத் தன்னை அடையாளப்படுத்தாமல் கட்சியின் முகமாகவே செயல்பட்டார். எனவேதான் பிரதமர் ஆகும் வாய்ப்புக் கிடைத்தபோதும் கட்சி முடிவின்படி அந்த வாய்ப்பை மறுத்தார். எளிமையின் சின்னமாக இருந்தவர் இறந்த பிறகும் தன் உயிரற்ற உடலும் மருத்துவ ஆய்வுகளுக்கு உதவ வேண்டும் என்று உயில் எழுதியவர்.
Add Comment