5. முதல் அதிரடி
விக்டர் யனுகோவிச் உக்ரைனின் கிழக்கு எல்லைப் பிராந்தியமான தோனஸ்கில் (Donetsk Oblast) 1950ம் ஆண்டு பிறந்த போது உக்ரைன் ஒரு தனி நாடு இல்லை. சோவியத் உக்ரைன் என்கிற அடைமொழியுடன் சோவியத் யூனியனின் உறுப்புப் பிராந்தியமாக இருந்தது. யனுகோவிச், சிறு வயதில் இருந்தே தன்னை ஒரு ரஷ்யக் குடிமகனாகக் கருதி வளர்ந்தவர். அப்படிக் கருதிய நேரம் போக எஞ்சிய பொழுதில் பேட்டையில் ஒரு தேர்ந்த தாதாவாகவும் உருவாகி வந்தார். ஒன்றிரண்டு சமயங்களில் தடாலடிச் சம்பவங்கள் செய்தமைக்காகச் சிறைத் தண்டனையும் பெற்றிருக்கிறார்.
யனுகோவிச்சின் தந்தை ஒரு இரும்புப் பட்டறைத் தொழிலாளி. அவரது தாயார் ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். கஷ்ட ஜீவனமே என்றாலும் பிள்ளையை அவர்கள் நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் படிக்க வைத்தார்கள். அப்போது அவர் நன்றாகப் படித்தாரா என்று தெரியவில்லை. ஒரு நிலக்கரித் தொழிற்சாலையில் சிறிது காலம் பணியாற்றினார். தொழிற்சங்க நடவடிக்கை எல்லாம் அவருக்கு அத்துப்படி. திடீரென்று பிற்காலத்தில் (என்றால் 2000வது ஆண்டு) பொருளாதார டாக்டர் பட்டம் எல்லாம் பெற்றார்.
எப்போதும் ரஷ்ய ஆதரவு என்னும் நிலைபாடு கொண்டவர் ஆதலால் தொடக்கம் முதலே அவருக்கு ரஷ்ய அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இருந்தது. அதனால்தான் தனது அரசியல் பிரவேசத்தை ஒரு ஆளுநர் பதவியில் இருந்து அவரால் ஆரம்பிக்க முடிந்தது. அதே தோனஸ்க் பிராந்தியத்துக்கு ஆளுநர். கவனியுங்கள். இரண்டாயிரமாவது ஆண்டில் எல்லாம் உக்ரைன் தனி நாடு. 1991ல் சோவியத் சிதறியதில் இருந்தே தனி நாடு. இருந்தாலும் உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதிகள் அனைத்துமே ரஷ்யாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. பேருக்கு உக்ரைன் மாகாணம். ஆனால் அங்கே அரசியலைத் தீர்மானிப்பதெல்லாம் ரஷ்யா.
Add Comment