109. சாகாதிருப்பவன்
எனக்கொரு கணிப்பு இருந்தது. கருவூர்ச் சித்தர் பூடகமாக எதையோ கருதித்தான் இப்படியெல்லாம் செய்கிறார் என்று சார்வாகன் நினைத்தாலும், அவரது பூடகத்தின் பின்னால் இருந்த காரணத்தை நானறிவேன். பாரதாய தத்தனின் தேவை என்ன என்று சார்வாகனால் உணர்ந்தறிய இயலவில்லை. தன் பொருட்டு அவன் வீட்டாரிடமும் குலத்தாரிடமும் அவப்பெயரெடுத்து அவமானப்பட நேர்வது குறித்து அவன் உண்மையிலேயே மிகுந்த வருத்தம் கொண்டிருந்தான்.
என்ன பெரிய சித்தர், என்ன பெரிய ரகசியத் திட்டம்? அப்படி அவனது தேவை தவிர்க்கவே இயலாததென்றால், அவனது இருப்புக்கும் நிம்மதிக்கும் பாதிப்பின்றி அதை நிறைவேற்றிக் கொள்ள இயலாதா? அது முடியாதென்றால் அவர் எதற்கு? அவரது சித்து எதற்கு?
என்றுதான் சார்வாகன் மீண்டும் மீண்டும் தனக்குள் எண்ணினான். ஆனால் சித்தரின் அந்தக் குறிப்பிட்ட செயல்பாட்டில் இரு தரப்புக்குமான தீர்வொன்றை உத்தேசித்திருந்தது எனக்குப் புரிந்தது.
தத்தனிடம் இருந்த பெருஞ்சிக்கல் என்று சார்வாகன் கருதியது, அவனால் எல்லா இடங்களிலும் உண்மையாக இருக்க முடிவதில்லை என்பது. அது அவனது பிழை இல்லை என்று சொல்லிவிடலாம். சுற்றத்தின் பிழையாகவே அது இருக்கக் கூடும். ஆயினும் அவன் அந்தச் சூழலின் சிசு. பொறுப்பினின்று விடுபட இயலாது. தன்னைக் குறித்து மட்டுமல்ல; எது குறித்துமே தோன்றுவதையும் உணர்வதையும் இடம் கருதாது, அச்சமின்றி எடுத்துப் பேசவல்ல ஒருவனுடன் மட்டுமே தன்னால் இயல்பாக இருக்கவும் பழகவும் முடியும் என்று சார்வாகன் நினைத்தான்.











Add Comment