152. சிரிபராந்தக திருவீர நாராயண சதுர்வேதி மங்கலம்
அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தோருக்கு அது பறிக்கப்படும்போது உண்டாவது அதிர்ச்சியோ, பதற்றமோ, தோல்வி மனப்பான்மையோ, உளச் சோர்வோ அல்ல. ஓர் இருண்மை. கருமையல்ல அதன் நிறம். அது நிறமற்ற வெளி. காற்றில்லாத வெளி. வெப்பமோ குளிர்ச்சியோ வேறொன்றோ அங்கே புகுவதில்லை. ஒன்றுமில்லாமையின் பூரணமென்பது ஒரு சிசு பிறந்த பின்பு தாயின் கருப்பைக்கு நிகழும் சுருக்கம் நிகர்த்தது. சிசுவைக் கண்ட மகிழ்ச்சியினைக் கொண்டு தாயால் அச்சுருக்கம் விளைவிக்கும் வெற்றிடத்தை நிரப்பிவிட முடியும். அதிகாரம் பறிக்கப்பட்டவனுக்குத் தன் எதிரே தெரிவதெல்லாமும் அவ்விருண்மையின் பூரணம் மட்டுமே. உள்ளும் புறமும் அதுவேயாக இருக்கும்போது சிந்தையைச் சரியான விதத்தில் இயக்கிச் செல்ல அவன் தாற்காலிகமாக மறந்து போய்விடுகிறான்.
வேட்டன் எறிபத்தன் அவ்வாறாகவே அக்காலத்தில் இருந்தான். மிகப் பல ஆண்டுகள் தவமிருந்த பின்பும் தனது தவமுறை பழுதுபட்டதாயிருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றவில்லை. ஒவ்வொரு முறை தவத்தில் தோல்வி நேரிடும்போதும் பதற்றம் மிகக் கொண்டு மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்துகொண்டிருந்தான். நிருதியை என்றென்றும் அணுகவே இயலாது என்று எண்ணிச் சோர்ந்து போனான். தன்னையே மாய்த்துக்கொள்ளலாமென்ற எண்ணம் வந்தபோதுதான் இறுதியாக மயூரமுகியைக் கருதித் தவமிருந்து பார்க்க அவனுக்குத் தோன்றியது. அதுதான் அவனைப் புதையுண்ட நிலையினின்று வெளிப்பட்டு மீண்டும் புவியின் மேற்பரப்பைக் காணச் செய்தது.











Add Comment