157. பரிசில்
மாயமுனி கேட்டதற்கு வேட்டன் ஒரு விடை சொன்னான். நான் அதனை மிகவும் ரசித்தேன். இதற்கல்லாமல் வேறெதற்கு மனிதர்கள் நகைப்பார்கள் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் நான் வெறும் சொல். அழிவே என் பொருளாயினும் என் பொருள் என்னிடத்தினில் இல்லை என்பதால் நான் என்னவென்பது குறித்த தெளிவான, திட்டவட்டமான வரையறை என்னிடமில்லை.
நீங்கள் கவனித்திருக்கலாம். இப்பெருங்கதையில் வாய்ப்பு அமையும்போதெல்லாம் இதை நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறேன். சிலருக்குச் சலிப்பே மூண்டிருக்கும் என்று தெரியும். இருப்பினும் எனக்குச் சலிக்கவில்லை பாருங்கள். நானொரு சொல்; என் பொருள் என்னிடத்தினில் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பதன் மூலம் அதன் எல்லைகளைக் கடந்து வேறொரு பெருவெளியில் தாவிவிட மாட்டோமா என்கிற மீச்சிறு இச்சை அதன் அடிப்படைக் காரணமாயிருக்கலாமென்று இப்போது தோன்றுகிறது.
இப்படித்தான் சார்வாகன், வேட்டன் உன் சேயோன் என்கிற சொல்லினை மட்டும் பற்றிக்கொண்டு பன்னெடுங்காலமாகத் திரிந்துகொண்டிருந்தான். எப்போது அதையே அவனது தியானப் பொருளாக்கி, அவனது தாயின் கருப்பையைக் கருதி அதனுள் மீண்டும் சென்று மீண்டானோ, அப்போது அவனுக்கு அனைத்தும் புலப்பட்டதைப் போல சொல்லெனும் என் தகுதியையும் பொருளற்ற அதன் தன்மையையும் மீண்டும் மீண்டும் கருதுவதன் மூலம் சொல்லுக்கும் பொருளுக்கும் அப்பால் ஆதித் தனிமம் என்னை ஏந்தியிருப்பதன் அடிப்படையை அகழ விரும்புகிறேன் போலிருக்கிறது. எதுவானாலும் இப்பெருங்கதையின் முடிவைக் காணாமல் இன்னொன்றை நான் தொடப் போவதில்லை. இப்போது எனக்கு இது ஒன்றே எல்லாமும் என்றாகியிருப்பதை விழிப்புடன் எண்ணிக்கொள்கிறேன்.











Add Comment