166. தீராத் துயர்
சார்வாகனே கேள். வேட்டன் எனும் சிறுவனை அவனது தகப்பன் என்னிடம் முதல் முதலில் அழைத்து வந்த நாளில் நான் கண்டதெல்லாம் அவனொரு கலைஞன் என்பதைத்தான். வேட்டனின் தகப்பனொரு சிற்பி. அமேயமாயன் நயனாங்குரன் என்றும் இரணசயனென்றும் சிரிபரனென்றும் மகாமல்லனென்றும் அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் நரசிம்மனின் காலத்தில் உருவாக்கப்பட்ட மல்லப்புரமெனும் சிற்ப நகரத்தினைப் பற்றி நீ கேள்வியுற்றிருக்கிறாயா?
அறிவேன் ஐயனே.
அன்றும் இன்றும் என்றென்றும் பல்லவ வம்சத்தின் பெயர் சொல்ல நிலைத்திருக்கப் போகிற மாபெரும் சிற்ப சாகசங்கள் அம்மாநகரில் நிகழ்த்தப்பட்ட காலத்தில் அம்மாமன்னனுக்காகக் குடைவரைக் கோயில்களை எழுப்பியளித் சிற்பிகளுள் ஒருவனாக இருந்தவன், வேட்டனின் தகப்பன். வேட்டனின் ஆசானும் அவன்தான். பாலியத்தில் சிற்பக் கலை பயின்ற வேட்டன், தன் தகப்பன் மல்லப்புரிக்கு மன்னனின் அழைப்பின் பேரில் சென்றபோது உடன் சென்றான்.
வேட்டன் ஒரு சிற்பியா? வினோதம்தான்.
கேள். பெருஞ்சிற்பிகள் தொழிற்பட்டிருந்த வேளையில் சிறுவனான வேட்டன் தனக்குக் கிடைத்த சிறிய கற்களில் தனக்குத் தெரிந்ததையெல்லாம் செதுக்கிச் செதுக்கி இரசித்துக்கொண்டிருந்தான். அவன் உருவாக்கிய சிற்ப வடிவங்களில் தென்பட்ட நேர்த்தியைக் கண்டு வியந்த மகாமல்லனே ஒரு முறை தனது அதிகாரிகளை அழைத்து, வேட்டனுக்கொரு பாறையை ஒதுக்கித் தந்துவிட்டு ஒதுங்கிச் செல்லும்படி உத்தரவிட்டிருக்கிறான்.
அட, இது ரசமான விவரமாக உள்ளது ஐயனே.











Add Comment