17. வளி
சலத்துக்கு மூன்று குணங்கள் உண்டு. தன்னினும் நிறை கூடிய பருப்பொருள் எதுவானாலும் ஏந்தித் தன் ஆழத்துக்குச் செலுத்தி அமர்த்திக்கொள்ளும். நிறையற்ற எதையும் மிதக்கச் செய்யும். துருவ மூலக்கூறுகளும் அயனிச் சேர்மங்களும் இரண்டறக் கலக்க இடம் தரும். கலந்தவற்றைப் பிரித்தெடுப்பது சாகசம். சாமானியர்களால் ஆகாது. இது இயற்கையின் கட்டமைப்பு. அணுகி ஆராய்ந்து பார்க்கலாம். விலகி நின்று வியக்கலாம். உணர்ந்து தெளிய முயற்சி செய்யலாம். அது ஓர் அற்புதம். ஆழங்காண இயலாதது.
சலத்தை நிகர்த்த அற்புதங்கள் நான்கு உண்டு. நிலமும் நெருப்பும் காற்றும் வானும். வேறு வேறு பண்புகள். வேறு வேறு கட்டமைப்பு. வேறு வேறு பயன்பாடு. சித்தம் கோத்த சிலரால் மட்டும் பஞ்ச பூதங்களைத் தன் வசத்திலும் தன்னை அவற்றின் வசத்திலும் விரித்தும் சுருட்டியும் வைக்க இயலும். நிலத்தின் பரப்பில் இருப்பதனாலேயே சலமென்பது நிலத்தைச் சார்ந்ததல்ல. அது ஒரு தோற்ற மயக்கம். நீந்திக் கடக்க முடிந்ததெல்லாம் நீரை அறிந்ததாகாது.










Add Comment