172. எரு
மூன்றாண்டு காலம் சார்வாகனுடன் இருந்து கற்றவை மாற்றியதா, தஞ்சப்புரிக்கு வெளியே மாயப் படித்துறையில் நின்றபடி கடைசியாக அவன் கூறி அனுப்பிய சொல் மாற்றியதா என்று பாரதாய தத்தனின் சிந்தைக்குள் அகழ்ந்து ஒற்றை முத்தென ஒன்றை என்னால் எடுக்க இயலவில்லை. ஆனால் மிகத் தெளிவாகப் புலப்பட்டது. சார்வாகன் எப்போதும் சொல்வது போல இனியும் அவன் சிறுவனல்லன். தத்தன் தன்னளவில் ஒரு முழு மனிதனாக உருப்பெற்றிருந்தான். அவனது கொதிப்புகளும் தவிப்புகளும் பெருமளவுக்குத் தணிந்துவிட்டிருந்தன. அவன் கனிந்திருந்தான் என்று சொல்ல இயலாது. ஆனால் குளிர்ந்திருந்தான். இறுதியாக அவன் சார்வாகனிடம் பேசி விடைபெற்றுப் புறப்பட்டபோதுகூடப் பரவசமும் பதற்றமும் மேலோங்கத்தான் இருந்தான். ஆனால் தஞ்சப்புரியிலிருந்து குடந்தை மாநகருக்கு வந்து சேர்ந்த பயணத்தில் மெல்ல மெல்லத் தனக்குள் ஆழ்ந்து சிந்தித்து நிதானத்தை எட்டிப் பிடித்திருக்கிறான். தன் தந்தையான சிவ பண்டிதருடன் அவன் மீண்டும் தஞ்சப்புரியை நோக்கி நடக்கத் தொடங்கி ஒரு நாழிகைப் பொழுதுக்குப் பிறகு அவரிடம் மெல்லப் பேசத் தொடங்கினான். அப்போது இது எனக்குப் புலப்பட்டது.
தந்தையே, புலையனென்றும் சார்வாகனென்றும் நீங்களும் இவ்வூராரும் குறிப்பிடும் அம்மனிதரின் குடிசையில் அவருக்குத் தொண்டாற்றிக்கொண்டு இருந்துவிட்டுத்தான் நான் மூன்றாண்டுகளைக் கழித்துத் திரும்பியிருக்கிறேன். என்னை உற்று நோக்குங்கள். என் புறத் தோற்றத்தில் சிவச் சின்னங்கள் இல்லாதிருக்கின்றனவா?
இல்லை.











Add Comment