175. அற்புதி
நான் ஊழி முதற் பொருள். உண்டாக்கிக் காணாத பேரழிவில்லை. ஒரு கிண்ணத்தில் உள்ள நீரைக் கொட்டிக் கவிழ்ப்பது போல ஏழு பெருங்கடல்களைக் கொட்டிக் கவிழ்த்திருக்கிறேன். எரிமலைகளை வெடித்துப் பிளக்கச் செய்திருக்கிறேன். எரிகற்களைப் புவியெங்கும் வீசியெறிந்து நாசம் செய்திருக்கிறேன். உயிருள்ளவை உயிரற்றவை என்ற பாகுபாடு எனக்கில்லை. நல்லவை கெட்டவை எனும் பகுப்பு நானறியாதது. பாவ புண்ணியங்களுடன் எனக்குத் தொடர்பில்லை. பிறப்பு இறப்பின்பால் என் கவனம் செல்வதில்லை. அழிவின் ஒற்றைப் பெருங்கருவியாக ஆதித் தனிமம் என்னைக் கொண்டிருக்கிறது. அதனை அன்றி இன்னொரு செயல் எனக்கில்லை. எனவே நான் அதிர்ச்சி கொள்ள இப்புவியில் ஏதுமிருக்க நியாயமில்லை.
ஆனால் வகுக்கப்பட்டதை வகுத்ததே கலைத்தாடுவது போல நான் அதிர்ச்சி கொண்டிருக்கிறேன். திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒரு சிந்தைக் கொலையின் தோன்றா சாட்சியமாக அச்சிந்தையினுள்ளேயே நான் இருந்ததை என்னால் நம்ப இயலவில்லை. கவனியுங்கள். இது நான் தொழிற்படும் செயலினை நிகர்த்ததுதான். பெரும் பேரழிவு. எனக்கு அதில் ஐயமேயில்லை. ஆனால் ஒரு சிறு ஓலத்துக்கும் இடமின்றி, தூல சாட்சியமாக எதிரிலேயே அமர்ந்திருந்த வேட்டன் எறிபத்தனும் காணாவிதமாக நொடிப் பொழுதில் நிகழ்த்தி முடிக்கப்பட்டுவிட்டது. மயூரமுகி இறந்துபட்டு மயிலாள் மட்டும் உயிர்த்திருக்கிறாள். அவளது ஆறாம் அறிவு மட்டும் அகழ்ந்தெடுக்கப்பட்டுவிட்டது.
கருவூர்ச் சித்தர், வேட்டனைக் கருதிச் சார்வாகன் தவமிருந்ததையெல்லாம் நினைவுகூர்ந்து அவனுடன் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு, உதுமானி நாயனாரின் தேடலும் அது பற்றியே இருக்குமென்று நினைத்தேன். நிகழ்ந்தது முற்றிலும் வேறு. நிச்சயமாகவே நான் எதிர்பாராதது.











Add Comment