19. காட்சித் திரிவு
அந்த இடம் நிலமாகவுமில்லை, நீராகவுமில்லை. கூவிளத்தையும் நெல்மணியையும் வாயில் கவ்வியிருந்த நீலக்கிளி நிலத்தில் கால் பதித்துத்தான் நின்றது. ஆனால் நிலமென்று அதனைச் சாமானியர்கள் கருத இயலாது. செந்நிறச் சீலை விரிப்பொன்றை நீர்ப்பரப்பில் விசிறிப் பரப்பினாற்போலவே இருந்தது. பாதம் பட்ட இடமெல்லாம் அலையாடிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு உண்டாகுமானால் வியக்க ஏதுமில்லை. சுற்றிலும் தருக்கள் அடர்ந்து நிறைந்திருந்தன. அனைத்துமே நூறாண்டுகளுக்கும் மேலாக வேர்விட்டு, விழுதுகள் படர்ந்து, தோற்றத்தில் தமது தொன்மையையும் இருப்பின் உறுதித்தன்மையையும் வெளிக்காட்டிக்கொண்டிருந்த தருக்கள். பழுவங்களும் கணவங்களும்* தென்பட்டன. வயிரங்காலி* இருந்தது. அவையுமே செம்புல நீரில் மிதக்கும் தோற்றத்தையே தந்தன. தஞ்சப்புரியிலும் குடந்தையிலும் நான் கண்டிராத பெரிய கருநிறக் கற்கள் ஆங்காங்கே குவியலாகக் கொட்டிக் கிடந்தன. ஆனால் அங்கே மலையென ஒன்று இருப்பது போல எனக்குத் தெரியவில்லை. எங்கிருந்தோ பெயர்த்துக் கொண்டு வந்து குவித்து வைத்தாற்போலக் கிடந்தன அக்கற்கள். கற்களின் இடையே வராகங்கள் அலைந்து கொண்டிருந்தன. சில காளைகளைக் காண முடிந்தது. வாசிகள் ஆறும் கலிமாக்கள் மூன்றும்* தென்பட்டன. ஒரு பழுவத்தினின்று நீண்டு இறங்கி நிலம் தொட்டுப் புதைந்திருந்த நூற்று எண்ணிக்கையிலான விழுதுகளோடு சில சர்ப்பங்களும் தொங்கிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. விவரமறியாத யாரேனும் குறுக்கே சென்றால் சுருட்டி எடுத்து விழுங்கிவிடும் என்று எண்ணத் தோன்றுமளவுக்கு ஒவ்வொரு சர்ப்பமும் கனம் கூடியவையாக இருந்தது. தேரைகள் சில. நாய்கள் சில. காகங்கள் சில. கிளிகள் சில. ஓரிடத்தில் சிறியதொரு புற்றினுள் இருந்து எண்பத்திரண்டு எறும்புகள் புறப்பட்டு வெளியே வந்ததைக் கண்டேன்.










Add Comment