மொத்தம் முப்பத்து மூன்று நிபந்தனைகள். அதில் பதினேழு நிபந்தனைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, காவல்துறை சார்பில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்குத் தனியிடம் மற்றும் இருக்கைகள். மாநாடு நடக்கும் இடத்தில் உள்ள ஆறு திறந்த வெளிக் கிணறுகளைத் தற்காலிகமாக மூடுதல். ரயில் தண்டவாளங்களை ஒட்டி உள்ள இடங்களைத் தடுப்பு ஏற்படுத்தி மறைத்தல். முக்கிய வி.ஐ.பி க்கள் வருவதற்குத் தனி வழி. மருத்துவம், மின்வாரியம், பொதுப்பணித்துறையிடம் அனுமதி, போதிய அளவு வாகன நிறுத்தம் உள்ளிட்ட பதினேழு நிபந்தனைகள் எக்காரணம் கொண்டு மீறப்படாது என்று எழுத்துமூலம் கோரிக்கை கொடுக்கப்பட்டு பின்னரே இந்த மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரி நிபந்தனைகள் எல்லா மாநாட்டிற்கு உண்டா இல்லை விஜய்யை மையமாகக் கொண்டு குடைச்சல்கள் கொடுக்க ஏற்பாடா என்று வழக்கம்போல சமூகவலைத்தள விமர்சனங்கள் தொடங்கின. இந்த நிபந்தனைகள் எதுவுமே புதிதில்லை. அதிகளவு கூட்டம் கூடும் எல்லா நிகழ்வுகளிலும் காவல்துறை இடத்தை ஆய்வு செய்து இம்மாதிரியான விதிமுறைகள் பரிந்துரைக்கும். இதில் முதல் முதலாக விஜய் என்ற பிரபலம் அதுவும் ஆளும்கட்சிக்கு எதிராக வருவதாக ஒரு தோற்றம் உள்ளதால் இது பெரிது படுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். ஊடகங்களும் இதை மேலும் பெரிதாக்க முயற்சி செய்கின்றன. த.வெ.க.வின் முக்கிய பொறுப்பாளரான புஸ்ஸி ஆனந்த் அனைத்தும் சட்டப்படி நடக்கும் என்று உறுதியளித்து அனுமதியை வாங்கியிருக்கிறார்.
Add Comment