அமைதியான இடம். இதமான தட்ப வெட்பம். அழகான இயற்கைச் சூழல். இப்படியானவை சுற்றுலா போவதற்குச் சிறந்த இடங்கள் என்கிற நம்பிக்கை இருந்தது. இந்த யூட்யூப் சானல்கள் வரும் வரை.
ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த இடங்களுக்குப் போய் வீடியோ போட்டால் யார் பார்ப்பார்கள்? எனவே அதிகம் அறியப்படாத அருவி, அணுக முடியாத குகை, காட்டுக்குள் இருக்கும் சிறுமலை என எங்கெங்கோ சுற்றித் திரிந்து படம் பிடித்தனர். அந்த அலை ஒருவாறு ஓய்ந்து போனது. இப்போதைய டிரெண்ட் சாகசப் பயணங்கள்தாம்.
பாட்டி வீட்டிற்குப் போவதென்றால் கூட உயரமான மலை, உடைந்து போன பாலம், முதலைகள் நிறைந்த ஆற்றைக் கடந்து புஜ்ஜியுடன் போவாள் டோரா. அது போல ஒரு உடைந்த புத்தர் சிலையைப் பார்ப்பதற்கு செல்ஃபி ஸ்டிக்குடன் ஆஃப்கானிஸ்தான் வரை கிளம்பிச் செல்கின்றர். போரில் பாதித்த பூமியைச் சூட்டோடு சூடாகப் பார்க்கும் த்ரில் அனுபவத்துக்காக சிரியா போகின்றனர். ‘எனது வீடியோவைப் பார்க்கும் உங்களுக்காக உயிரைப் பணையம் வைத்து வந்திருக்கிறேன்’ என உருக்கமாகப் பேசுகின்றனர்.
2021-ஆம் ஆண்டு தாலிபான் ஆட்சியைப் பிடித்தபிறகு ஆப்கானிஸ்தானின் சுற்றுலாத் துறைக்கு எவ்வித எதிர்காலமும் இருப்பதாகக் கருதப்படவில்லை. ஆனால் திடீரென ‘இன்ஃப்ளூயென்ஸர்களின்’ பார்வை ஆப்கனின் மேல் விழுந்தது. ஓரிருவர் சென்று வந்து, போட்ட வீடியோக்கள் மில்லியன் பார்வைகள் பெற்று வைரலானது. உடனே ‘நீங்கள் ஆஃப்கானிஸ்தானைக் கட்டாயம் பார்க்க வேண்டியதற்கான ஐந்து காரணங்கள்’ என்று கேப்ஷன் போட்ட வண்ணமய வீடியோக்கள் பரவலாக வரத் தொடங்கின.
Add Comment