கணினித் துறைக்கு நோபல் பரிசு கிடையாது. ஆனால் இவ்வாண்டு இரண்டு நோபல் பரிசுகள் கணினித் துறை சார்ந்தே வழங்கப்பட்டிருக்கின்றன. பள்ளிப் பருவத்து அறிவியல் பாடப்புத்தகத்தில் மூன்று பிரிவுகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்.
இவ்வாண்டு இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஏ.ஐ சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கே வழங்கப்பட்டுள்ளன. ஆக, அறுபத்தாறு சதவீத அறிவியலை ஆர்ட்டிஃபீசியல் இண்டெலிஜென்ஸ் ஆக்கிரமித்துள்ளது. இதுவரை. இனி இப்போக்கு வளரவே செய்யும்.
“அது சரி, கம்ப்யூட்டர் சயின்ஸ்க்கு ஏன் நோபல் ப்ரைஸ் இல்ல…?” நோபல் பரிசு உருவாக்கப்பட்ட காலத்தில் அன்றிருந்த தாக்கமிகு துறைகளை மட்டும் ஆட்டத்துக்கு சேர்த்துள்ளனர். அப்போது கம்ப்யூட்டர்களே இல்லை.
கணினித்துறையின் நோபல் என அழைக்கப்படுவது “டூரிங் அவார்ட்” (Turing Award). ஆலன் டூரிங் என்னும் உன்னதமான அறிவியலாளரின் நினைவாக வழங்கப்படுகிறது இவ்விருது. ஆண்டுதோறும்.
“ஆலன் டூரிங் யாரு…?” என்போர் “தி இமிட்டேஷன் கேம்” என்றொரு திரைப்படத்தைப் பார்க்கவும். இரண்டாம் உலகப் போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய பெருமை அம்மாமனிதரைச் சேரும்.
கதை இவ்வாறிருக்கையில் இந்த ஆண்டு எப்படி ஏஐக்கு நோபல் கிடைத்துள்ளது? அதுவும் ஒன்றல்ல, இரண்டு.
Add Comment