ஒவ்வொரு ஆண்டும் ஜூன் இறுதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம்வரை நடைபெறும் அமர்நாத் யாத்திரை, மிகச் சிறந்த ஆன்மிகத் தேடலாகப் பார்க்கப்படுகிறது. இந்தாண்டு ஜூலை மாதம் ஆரம்பித்த இந்த யாத்திரையில் இதுவரை இரண்டரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் பதிவுசெய்திருப்பவர்கள் நான்கு லட்சம் பேர். ஒவ்வொரு ஆண்டும் இந்த யாத்திரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த யாத்திரையின் சிறப்பம்சங்கள், களநிலவரம் என்ன?
அமரத்துவம் பற்றிக் கேட்ட பார்வதிக்கு அதைப் பற்றி விளக்கச் சிவபெருமான் தேர்ந்தெடுத்த இடம்தான் அமர்நாத். அந்த ரகசியத்தை யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காகப் பஹல்காம், சந்தன்வாரி, சேஷ்னாக், மகாகுனாஸ் பர்வதம், பஞ்சதரணி என ஐந்து இடங்களிலும் தனது சந்திரன், நந்தி, ஜடாமுடி, நாகம், கணேசன் என ஐந்தையும் விட்டுவிட்டு மலையேறினார் என்பது ஐதிகம். இந்த ஐந்து இடங்களின் வழியாகத்தான் இன்று வரை அங்கு மேலேறிச் செல்ல முடியும்.
இந்தக் கோவில் நிர்வாகத்தை ஸ்ரீ அமர்நாத்ஜி ஷ்ரைன் போர்டு (SASB) என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது. பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளையும், பல்வேறு மேம்பாட்டுப் பணிகளையும் இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
அமர்நாத் பனிலிங்கத்தைத் தரிசிக்க ஜம்முவிலிருந்து பஹல்காம் வழியாக, பல்தால் வழியாக என இரண்டு வழிகளில் மேலேறலாம். சற்று செலவானாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்களுக்கு ஹெலிகாப்டர் வசதிகளும் உண்டு. அதற்கு முதலில் ஜம்மு அல்லது ஸ்ரீநகர் சென்றடைய வேண்டும். வான்வழிப் பயணத்திற்கு ஸ்ரீநகரும், ரயில் பயணத்திற்கு ஜம்முவும் வரலாம்.














Add Comment