குழந்தைகள் மருத்துவ உபகரணங்களுடன் இணைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைப் படுக்கையிலேயே இறந்து உடல் அழுகுகிற காட்சியைப் படம்பிடித்து வெளியுலகுக்குக் காட்டினார் செய்தியாளர் மஹமத் பாலுஷா. நவம்பர் பத்தாம் தேதி இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸா, அல் நசிர் மருத்துவமனையில் இருந்தவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றியது. மருத்துவச் சிகிச்சையில் இருப்பவர்களை ஆம்புலன்ஸ் உதவி இன்றி வெளியேற்ற முடியாது என்று பேச்சுவார்த்தை நடத்தியபோது ராணுவத்தின் தரப்பில் பேசியவர் ஆம்புலன்ஸ் வருகிறது என்று உறுதியளித்தார். கட்டாயத்தின் பேரில் கைகளில் தூக்கிச் செல்ல முடிந்த குழந்தைகளை எடுத்துக் கொண்டும் கைத்தாங்கலாக சிலரை அழைத்துக் கொண்டும் வெளியேறினர் மருத்துவப் பணியாளர்கள். உறவினர்கள் இருந்தோர் அவர்கள் உதவியுடன் வெளியேறினர். தகுந்த உபகரணங்கள் இன்றி ஆக்ஸிஜன் சப்போர்ட்டில் இருந்த குழந்தைகளை ராணுவம் காப்பாற்றும் என்று நம்பி வெளியேறிய மருத்துவர்கள் இருபது நாள் கழித்து அழுகிய உடல்களை வீடியோவில் பார்த்து அறிந்துகொண்டனர்.
காஸாவின் மீதான இஸ்ரேல் போரின் தீவிரம் குறையவே இல்லை. கட்டம் கட்டமாகப் போட்டு இஸ்ரேல் வெளியிட்ட வரைபடத்தில் மக்கள் எந்தக் கட்டம் பாதுகாப்பானது என்று புரியாமல் ஓடினர். கான்யூனுஸ் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் இஸ்ரேல் தூவிய துண்டறிக்கைகளில் வழக்கமான இடம் மாறுங்கள் அறிவிப்புக்குப் பதிலாகக் குரான் வாசகம் இருந்தது. “தவறு செய்பவர்களை வெள்ளம் கொண்டு போகும்” என்கிற அந்த வாசகத்துக்குக் கடல்நீரை காஸா சுரங்கங்களில் செலுத்தப் போகிறது இஸ்ரேல் என்று சிலர் பொழிப்புரை வழங்கினர்.
Add Comment