மொபைலில் தீவிரமாக எதையோ ஆராய்ந்து கொண்டிருந்த இகவானவன், “என்னங்க..” என்று காய்கறிக்காரன் வண்டியிலிருக்கும் மைக் கத்துவதைப் போன்ற டெஸிபலில் ஓர் அலறல் கேட்டுத் திடுக்கிட்டான். அவன் கையிலிருந்த மொபைல் நழுவித் தரையில் விழுந்து நீச்சலடித்தது.
இருபத்தாறு மைல் மாரத்தான் ரேஸை இருபத்தைந்து நிமிடத்தில் ஓடி முடித்தவள் போன்று மூச்சிரைக்க, கண்களை உருட்டி விழித்தபடி திருமதியானவள் தரையதிர அருகில் வந்து நின்றதில், ஒரு கணம் வெலவெலத்துப் போய்விட்டான்.
ஆனாலும் சுதாரித்துக் கொண்டவனாய்க் கேட்டான். “நீ சாதாரணமாக் குரல் குடுத்தாலே வீடு அதிரும். எதுக்கு இப்படி ஹைடெஸிபல்ல கத்தற..? என்னாச்சு..?”
“உடனே என்கூடக் கிச்சனுக்கு வாங்க. வந்து பாருங்க அந்த அக்கிரமத்தை..”
“அங்க எத்தனையோ வருஷமா நீ ஒருத்திதானே அக்கிரமம் பண்ணிக்கிட்ருக்க. இப்ப யாரு புதுசா கைப்பத்திருக்காங்க அதை..?”
“மூணு வேளையும் மூக்குப் புடிக்கத் தின்னுட்டு என் சமையலையா கிண்டல் பண்றீங்க..? மரியாதையா மன்னிப்புக் கேக்கலைன்னா அடுத்த ஒரு வாரத்துக்குக் கிச்சன் பக்கமே போகமாட்டேன்.”
“ஆஹா… ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக்கலாம்.”
Add Comment