10. தனி
மன்னர்கள் காலத்தில் ஒரு நாடு இன்னொன்றின் மீது படையெடுப்பது, அவர்கள் பதிலுக்குப் படையெடுப்பது, படையெடுப்புகளுக்குக் கூட்டணி சேர்த்துக்கொள்வது, முதுகில் குத்துவது, பிறகு மலர் வளையம் வைப்பது எல்லாம் சாதாரணம். கலாட் அரசு சிந்து-பஞ்சாப்பைத் தாக்கியதெல்லாம் அதனினும் சாதாரணம். எல்லை விரிவாக்க ஆசை இல்லாத மன்னருண்டா உலகில்?
ஆனால், பகுதியளவேனும் பொருட்படுத்திவிடலாம் என்று பிரிட்டிஷ் அரசு நினைக்கும்படி ஆனதற்கு கிரக நிலைகள்தாம் காரணமாக இருந்திருக்க வேண்டும். நடந்ததை எண்ணி வருந்திப் பயனில்லை. பலூச்சிகளுக்கு அந்தப் பகுதியளவு பிரிட்டிஷ் கவனிப்பு ஒரு மாதிரி பழகத் தொடங்கியிருந்தது. சொந்த நாடு, தனி நாடு சொகுசு இனி இல்லை என்றாலும் நாடு என்கிற அந்தஸ்து அப்படியேதான் இருந்தது. பிரிட்டிஷார் அதில் கை வைக்கவில்லை. மொத்த பலூசிஸ்தானும் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதி என்று சொல்லித் தூக்கி விழுங்கிவிடவில்லை. கலாட்டை ஆண்ட கான்களுக்கு உரிய மரியாதை தரத் தவறவும் இல்லை. 1839 ஆம் ஆண்டு மிர் நாசிர் கானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை 1854 ஆம் ஆண்டு ஒருமுறை புதுப்பித்துக்கொண்டார்கள். அதே ஒப்பந்தத்தை இன்னும் சில சேர்மானங்களுடன் 1876 ஆம் ஆண்டு திரும்பவும் புதுப்பித்தார்கள்.
இம்முறை அந்த ‘சேர்மான’த்தில் சில விசேடங்கள் இருந்தன. அதுவரை பலூசிஸ்தான் அரசின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கை வைத்திருந்தார்கள். இப்போது, கொஞ்சம் தலையிட்டுப் பார்க்க முடிவு செய்தார்கள்.
சிக்கல் ஏதும் உண்டாகாத வரை அன்பே அன்பே. ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகி வைத்து வழக்கு, விசாரணை என்று வருமானால் சுல்தானின் நீதிமன்றத்தில் ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட் வந்து உட்காருவார். மன்னராகவே இருந்தாலும் சரி. அவரது நியமன சர்தார்களானாலும் சரி. வழக்குகளை அந்த ஏஜெண்ட்டின் முன்னால்தான் நடத்த வேண்டும். தீர்ப்புகளில் பிரிட்டிஷ் ஏஜெண்ட் சொல்லும் கருத்துகளை ‘நட்புடன் ஏற்க’ வேண்டும். விசாரணையின்போதே அவர் தோழமைச் சுட்டல் எதையாவது செய்வாரானால் அதையும் ஏற்க வேண்டும்.
ஒப்பந்தத்தின் இன்னொரு பகுதி, கலாட் மன்னருக்கு மகிழ்ச்சி தரும்விதமான ஓர் அம்சத்தைக் கொண்டிருந்தது. பலூசிஸ்தான் எங்கும் பிரிட்டிஷ் படைகளைப் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைத்திருந்தார்கள் என்று பார்த்தோம் அல்லவா? அதில் சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறப்படும்.










Add Comment