சில நேரங்களில் உலக அரசியலை மாற்றும் செய்தி போர் விமானத்தின் கர்ஜனையிலோ, அணு ஆயுத அறிவிப்பிலோ வராது. ஒரு குழந்தை அணிந்திருக்கும் மேலங்கியின் நிறத்திலோ, காலணியின் வடிவிலோ கூட அது மறைந்து கிடக்கலாம்.அப்படியெனில் அந்தக் குழந்தை சாதாரணக் குழந்தை அல்ல.
உலகின் மிகவும் மர்மமான, ரகசியமான இரும்புத் திரை நாடாகக் கருதப்படும் வட கொரியாவின் ஆட்சியாளர் கிம் ஜாங் உன்னின் மகள் சமீப காலமாக இணையத்தில் பெரும் பரவலாகி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்வரை அவரது இருப்பே உலகுக்குத் தெரியவில்லை. ஆனால் இன்று ஏவுகணைச் சோதனைத் தளங்களிலும், ராணுவ அணிவகுப்புகளிலும், நாட்டின் முக்கிய அரசியல் நிகழ்ச்சிகளிலும் தந்தைக்கு அருகில் அமைதியாக நிற்கும் அந்தச் சிறுமி, உலக உளவுத்துறைகளின் கணிப்புகளையும், அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
அவரது பெயர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத போதிலும், உலக ஊடகங்கள் அவரை ‘கிம் ஜூ யே’ என்று அழைக்கின்றன. ஆனால் இங்கு பேசுபொருளாகி இருப்பது அவரது பெயர் அல்ல, அவர் அணியும் ஆடைகள். அவருக்குப் பதின்மூன்று வயது இருக்கலாமெனக் கருதப்படுகிறது. ஆனால் அவர் அணியும் ஒவ்வோர் ஆடையும், ஒவ்வொரு தோற்றமும் வட கொரியாவின் எதிர்காலத்தைப் பிரதிபலிக்கிறதா என்பதே அரசியல் ஆய்வாளர்களின் ஒருமித்த கேள்வி.















Add Comment