Home » நீ வேறு, நான் வேறு – 41
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 41

41. அமைதிக் கால அட்டகாசங்கள்

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது மார்ச் இருபத்தைந்தாம் தேதி முதல் ஆகா முஹம்மது யாஹியா கான் பாகிஸ்தானை ஆளத் தொடங்கினார். மிகச் சரியாக அதே காலக்கட்டத்தில்தான் ஒன்பது கிரகங்களும் டீ குடித்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போய், முட்ட முட்ட சரக்கடித்துவிட்டு வந்து கொட்டம் அடிக்க ஆரம்பித்தன. பாகிஸ்தான் அரசு தனது வாழ்நாளில் காணாத மாபெரும் நெருக்கடிகளையெல்லாம் அப்போது கண்டது. கிழக்கு பாகிஸ்தான் எந்தக் கணத்திலும் பிரிந்துவிடும், சுதந்தர பங்களா தேஷுக்கான இறுதி யுத்தம் தொடங்கிவிடும் என்பது யாஹியா கானுக்குத் தெரிந்தது. பாகிஸ்தானின் மொத்த ராணுவ பலத்தையும் கொண்டுபோய் கிழக்கு பாகிஸ்தானில் குவித்தத்தும் போதாது என்பதுதான் உண்மை நிலைமை. ஏனெனில், அன்றைய தேதியில் பங்களா தேஷில் உருவாகியிருந்தது, மிக இயல்பான மக்கள் புரட்சி. யாரோ ஒரு சிலர் கொடி பிடிக்கவில்லை. யாரோ ஒரு சிலர் ஆயுதம் ஏந்தவில்லை. மொத்த கிழக்கு வங்காள மக்களும் வீதிக்கு வந்து நின்றிருந்தார்கள். முக்திபாகினி இருந்தது. முஜிபுர் ரஹ்மான் இருந்தார். பிற தலைவர்கள் இருந்தார்கள். அனைத்துக்கும் பின்னால் இந்திய ராணுவத்தின் நிபந்தனையற்ற ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தது.

அது வேறொரு அரசியல். வேறொரு ஆட்டம். இங்கே அதை விரிவாகச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆனால் யாஹியா கானின் கவலை வேறு. எப்படியானாலும் கிழக்கு பாகிஸ்தான் பிரச்னையை மையமாக வைத்து ஒரு பெரிய காரியத்தில் ஈடுபட்டுத்தான் தீர வேண்டியிருக்கும். அங்குள்ள போராட்டக்காரர்களுக்கு இந்திய அரசு உதவி செய்துகொண்டிருப்பது இன்னும் சிக்கல். எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் புராதனமான கட்டமைப்பை அத்தனை எளிதாகத் தகர்க்கவும் முடியாது. விவகாரம், கிழக்கு பாகிஸ்தானுடன் நிறைவடையுமானாலே மிகுந்த மகிழ்ச்சியடையலாம். ஒருவேளை அவர்களைப் போல நாமும் என்று இதர மாகாணங்கள் வீறுகொள்ளத் தொடங்கிவிட்டால் என்ன ஆவது?

சிந்து, பஞ்சாப், கைபர்கூடப் பரவாயில்லை. ஓரளவு சமாளிக்கக் கூடிய பகுதிகள்தாம். இந்த பலூசிஸ்தான்?

யாஹியா கான், ராணுவ ஆட்சியாளராகப் பொறுப்புக்கு வந்துதான் கொஞ்ச நாள் ஆகியிருந்தது. ஆனால் 1939 ஆம் ஆண்டு முதலே அவர் ராணுவத்தில் இருந்தவர். முதலில் பிரிட்டிஷ் இந்திய ராணுவம். பிறகு பாகிஸ்தான் ராணுவம். பாகிஸ்தானின் இண்டு இடுக்கு விடாமல் சுற்றித் திரிந்தவர். குறிப்பாக, அயூப் கான் ஆட்சிக் காலத்தில் மிகச் சிறியதொரு டீக்கடைத் தகராறே என்றாலும் மறுகணம் அவர் நேரடியாக யாஹியாவுக்குத்தான் போன் செய்வார். இரண்டாவது இந்திய-பாகிஸ்தான் போர்க் காலத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குப் போய் நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டு, பாகிஸ்தான் படைகளின் ஒவ்வொரு அசைவையும் வரையறுத்துக் கொடுத்தது யாஹியா கான்தான். பிறகு அதே அயூப் கான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பலூசிஸ்தானில் விடுதலை இயக்கங்களைக் கலைத்து ஆடத் திட்டம் போட்டுக் கொடுத்தவரும் அவர்தான். அவரேதான் பலூசிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டி, கைதாகியிருந்தவர்களை விடுவித்தார். நிபந்தனை ஏதுமில்லாமல் மாநில உரிமைகளைத் திருப்பிக் கொடுத்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!