கல்வீச்சு வாங்கிய மகிந்த!
1951-ம் ஆண்டு என்பது மகிந்த ராஜபக்சே குடும்பத்திற்கும் சரி, இலங்கை அரசியலுக்கும் சரி… மிக முக்கியமான ஆண்டு. 1948-ம் ஆண்டு சுதந்திரமடைந்திருந்த இலங்கையை ஐக்கிய தேசியக் கட்சி ஆண்டு கொண்டிருந்தது. மதச் சார்பின்மை, கட்டற்ற ஜனநாயக விழுமியங்கள், மேலைத்தேய ஸ்டைலில் நவ தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை என்று பிரிட்டனின் நகலாகத்தான் தேசம் இருந்தது. தேசப்பிதா என்று அழைக்கப்பட்ட டீ.எஸ். சேனாநாயக்க பிரதமராய் இருந்தார். முன்னமே சொன்னோம் அல்லவா..? என்னதான் ஜனநாயகம், லிபரல்வாதம் என்று தென்னாசியாவில் ஆட்சியாளர்கள் கூப்பாடு போட்டாலும் வாரிசுகளும் மாமன்களும், சக்களத்திகளும்தானே அரசியல் செய்வார்கள். டீ.எஸ்.இற்குப் பிறகு அவரது புதல்வர், உறவினர்கள் என்று பாத்திரம் ஏந்திக் கொண்டு ஒரு கூட்டம் இருந்தது. பெரும் நிலப்பிரபுத்துவ ஜமீந்தாரும் மற்றொரு மேட்டுக்குடி திருமகனுமான எஸ்.டப்ளிவ்.ஆர்.டீ பண்டாரநாயக்க நிலைமையைத் தீவிரமாய்க் கவனித்தார். நிலைமை இப்படியே தொடர்ந்தால் அதிகாரத்தின் உச்சிக்குச் செல்ல தன்னால் இந்த ஜென்மத்தில் முடியாது என்பதை மட்டும் புரிந்து கொண்டார்.
முஹம்மத் அலி ஜின்னா இஸ்லாமிய தேசியவாதத்தைக் கையில் எடுத்து கோட் சூட்டைக் கழற்றிவிட்டு ஷெர்வானி ஆடைக்கு மாறி துருக்கித் தொப்பி அணிந்து கொண்டது போல வெள்ளை வெளேர் என்று தேசிய ஆடைக்கு மாறினார் எஸ்.டப்ளிவ் ஆர்.டீ பண்டாரநாயக்க. சிங்களத் தேசியவாதத்தை ஒரு கையிலும் பவுத்த மதத்தை மறுகையிலும் ஏந்தத் தொடங்கினார். இத்தனைக்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பட்டதாரி அவர். அரசியல் செய்ய ஆக்ஸ்போர்டாவாது, ஆக்டோபஸாவது… தான் பதவிக்கு வந்தால் சிங்களம் மட்டும் என்ற கொள்கையை அமல்படுத்துவதாக அறிவித்தார். அதாவது சிங்களம் ஒன்றுதான் ஒரே மொழி, தேசிய மொழி, அரச கரும மொழி எல்லாமே.. அவ்வளவுதான். அன்றுவரை உறங்கிக் கிடந்து இருந்த பவுத்த துறவிகள் எழுச்சி கொண்டு எழுந்தார்கள். ‘இவனல்லவா மனிதன்’ என்றவாறு பண்டாரநாயக்கவைத் தோளிலும் மார்பிலும் தாங்கிக் கொண்டார்கள்.
Add Comment