துபாய் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஆடம்பரம். அதற்குச் சாட்சியாகப் பல விஷயங்கள் இருந்தாலும் விண்ணைத் தொடும் புரூஜ் கலீஃபாவிற்கு முதலிடம் தர வேண்டும். சுற்றுலா செல்பவர்களிடம் காசு தாராளமாக இருந்தால் புரூஜில் உள்ள ‘அட் தி டாப்’, அதாவது நூற்று இருபத்து நான்காவது மாடிக்குச் செல்வார்கள். அங்கு இருக்கிற கண்ணாடி அறையில் நின்று மேகங்களைக் கால்களுக்குக் கீழ் பார்த்துப் பரவசப்படுவார்கள்.
மேலும் பரவசம் வேண்டும் என்றால் சில நூறு திர்ஹாம்கள் செலவு செய்து , ‘அட் தி டாப் ஸ்கை’ சென்று சொர்க்கத்தின் வாசலில் நிற்பது போல் உணர்வார்கள். எதற்கு அத் தி டாப், அது இது என்று யோசிப்பவர்கள் துபாய் மாலின் பின்வாசலில் நின்று புரூஜ் கலீஃபா தலைக்கு மேல் இருப்பது போல் முழுதாகப் படம் எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட இரண்டு கோடி மக்கள் வந்து இந்தக் கட்டடத்தை அண்ணாந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.
இது உலகத்தின் மிக உயர்ந்த கட்டடம் மட்டுமில்லை. துபாய் அரசர் ஷேக் முஹம்மத் எந்தச் சமரசமின்றித் தன் கனவை நிஜமாக்கிய நவீன அதிசயம். இதனால் துபாயின் சுற்றுலா உச்சத்துக்குச் சென்றது. ஒவ்வொரு புத்தாண்டின்போதும் புரூஜ் களைகட்டும். துபாயில் உள்ள முக்கியமான ஷேக் ஜாயீத் சாலையை மதியமே மூடிவிடுவார்கள். காவல்துறை பந்தோபஸ்து கெடுபிடியாக இருக்கும். எங்கிருந்து மக்கள் வருவார்கள், எப்படி வருவார்கள் என்று தெரியாது, ஆனால் சாலை மூடுவதற்குள் வந்து சேர்ந்துவிடுவார்கள்.














Add Comment