கடந்த மூன்று வருடங்களாகக் கோவிட் பரவியது எப்படி..? பரிசோதனைக் கருவிகள் மற்றும் தடுப்பூசிகள் சரியாக வேலை செய்கின்றனவா..? உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் தடுப்பூசியின் அவசியத்தை விளக்குவது, விநியோகிக்க ஆலோசனை வழங்குவது என்று மூச்சுக்கூட விடமுடியாமல் பலதரப்பட்ட வேலைகளில் மூழ்கியிருந்தது சி.டி.சி. (CDC – Centers for disease control and prevention). இடைப்பட்ட நேரத்தில் மற்றொரு தொற்று மெல்ல மெல்ல வளர்ந்து இப்போது அமெரிக்காவைப் பயமுறுத்துகிறது. அது ஒரு பூஞ்சைத் தொற்று. பெயர் கேண்டிடா ஆரிஸ் (candida auris). இதைப் பற்றி ஒரு எச்சரிக்கை அறிவிப்பைக் கடந்த திங்கள் கிழமை அன்று சி.டி.சி. வெளியிட்டிருக்கிறது.
2016-ஆம் ஆண்டிலேயே நியூயார்க், இல்லினாய்ஸ் மாகாணங்களில் சி.ஆரிஸ் கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நாள் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பவர்கள் மற்றும் முதியவர்களை இது தாக்கலாம் என்று அப்போது சுகாதார நிபுணர்கள் சந்தேகித்தார்கள். 2019-ஆம் ஆண்டில் ஐநூறு பேர்; 2021 இல் ஆயிரத்து 474 பேர் என்று படிப்படியாகப் பரவிய இந்தத் தொற்றானது 2022-ஆம் ஆண்டு இறுதியில் 2 ஆயிரத்து 377 பேரை அமெரிக்காவில் பாதித்திருக்கிறது. பாதிக்கும் மேலான மாகாணங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியா, டெக்சாஸ், நெவாடா, புளோரிடா மாகாணங்களில் அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட்டைக் காட்டிலும் எண்ணிக்கையில் குறைவாகவே இருந்தாலும், இந்த பூஞ்சைத் தொற்றைப் பற்றி சி.டி.சி. அதிகமாகக் கவலையடைந்துள்ளது.
Add Comment