நாற்பத்து எட்டாவது சென்னைப் புத்தகக் கண்காட்சி, இந்த மாதம் இருபத்து ஏழாம் தேதி தொடங்கி ஜனவரி பன்னிரண்டாம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. பொங்கல் விடுமுறைக்கு முன்னதாகவே கண்காட்சி நடத்தப் படுவதால் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? புத்தக விற்பனையில் பாதிப்பு இருக்குமா? இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு என்னென்ன புதிய புத்தகங்கள் வரவிருக்கின்றன? இது தொடர்பாகச் சில பதிப்பாளர்களிடம் பேசினோம்.
‘டிசம்பரிலேயே புத்தகக் கண்காட்சி வைப்பது வரவேற்கத் தக்க விஷயம்தான். விடுமுறை தினங்களில் மக்கள் கண்காட்சிக்கு அதிக அளவில் வருவார்கள். விற்பனை நன்றாக நடக்கும் என்கிற எண்ணத்தில்தான் பொங்கலை ஒட்டி கண்காட்சி வைக்கும் பழக்கம் வந்தது. ஆனால் கடந்த ஐந்தாறு வருடங்களாகவே பொங்கலை ஒட்டி கண்காட்சிக்குக் கூட்டம் வருவதில்லை. நாலைந்து நாள்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் பெரும்பாலான மக்கள் வெளியூர்களுக்குப் பயணம் செய்து விடுகின்றனர். காணும் பொங்கல் அன்று கடற்கரைக்கோ, திரையரங்குகளுக்கோ வரும் கூட்டம் புத்தகக் கண்காட்சிக்கு வருவதில்லை. எனவே புத்தகக் கண்காட்சியைப் பொங்கலுக்கு முன்னதாகவே வைத்து முடித்து விட வேண்டுமென்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த ஆண்டு அது ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.’ என்பதுதான் பெரும்பாலான பதிப்பகத்தாரின் பொதுக் கருத்தாக இருக்கிறது.
‘புத்தக விற்பனையைப் பொறுத்த வரையில், சென்னையில் எப்போது புத்தகக் கண்காட்சி நடத்தினாலும் விற்பனை நன்றாகவே நடக்கும். உதாரணமாக, 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் அடித்த புயல் மழை காரணமாக 2016-ஆம் ஆண்டு, ஜனவரியில் கண்காட்சி நடக்கவில்லை. அந்த ஆண்டு ஜூன் ஜூலையில் தீவுத் திடலில் கண்காட்சி நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். விற்பனையில் சுணக்கம் ஏதும் இல்லை.’ என்றார் டிஸ்கவரி வேடியப்பன்.
Add Comment