கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய விசா வகையான கே (K) விசாவை சீனா அறிவித்தது. இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டப் பணி இல்லாதவர்களும் வெளிநாட்டினரும் எளிதாகச் சீனாவுக்குள் நுழையலாம். கே விசா வைத்திருப்பவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தொழில்முனைவோரும் வர்த்தகப் பரிமாற்றங்களில் ஈடுபட முடியும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. கே விசா அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. உலக அரங்கில் திறமையாளர்களை ஈர்ப்பதற்கான சீனாவின் உத்தியின் ஒருபகுதியாக கே விசா பார்க்கப்படுகிறது.
சீனாவின் சீரமைக்கப்பட்ட வெளிநாட்டு வேலை அனுமதிக் கொள்கை (Foreign Work Permit) 2017 ஏப்ரல் 1 அன்று தொடங்கப்பட்டது. அதன்படி சீனாவில் பணிபுரியும் வெளிநாட்டினரை மூன்று பிரிவுகளாகப் பிரித்தனர். அவர்களின் சம்பளம், கல்வி, பணி அனுபவம், சீன மொழிப் புலமை, வயது போன்ற காரணிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டனர். 2017 ஏப்ரலுக்கு முன்பு வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு இரண்டு தனித்தனி அமைப்புகள் இருந்தன. இந்த இரட்டை அமைப்புகள் பல குழப்பங்களைக் கொண்டிருந்தன. இதை சீனா சீர்திருத்தி, இரண்டு அமைப்புகளையும் ஒரே குடையின் கீழ் இணைத்தது. புதிய அமைப்பு ஏ/பி/சி என்னும் வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியது. உயர்மட்டத் திறமையாளர்களுக்கு ஏ பிரிவும்,தொழில் நிபுணர்களுக்கு பி பிரிவும்,குறுகியகாலம் பணி புரிவோருக்கு சி பிரிவும் ஒதுக்கப்பட்டன. இது வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் நடைமுறைச் சிக்கல்களை எளிதாக்கியது.














Add Comment