சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சி, நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் ஜனவரி 16-18 தேதிகளில் நடந்து முடிந்தது. அதற்கு நான்கு நாள்களுக்கு முன்பாக நிறைவடைந் வழக்கமான சென்னைப் புத்தகக் காட்சி, வாசகர்களுக்கானது. இது மொழிபெயர்ப்பு சாத்தியங்களைத் தேடும் பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கானது. அது பபாசி என்னும் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூட்டமைப்பால் நடத்தப்படுவது. இது, தமிழ்நாட்டு அரசு செலவு செய்து நடத்துவது.
பொதுவாக நாம் என்ன நினைப்போம்? தனியார் தொட்டுத் துலக்கும் ஒரு செயல், ஓர் அரசாங்கம் செய்வதினும் சிறப்பாக இருக்கும்; சரியாக இருக்கும். அப்படித்தானே? இந்த இரண்டு புத்தக விழாக்களைப் பொறுத்தவரை இது முற்றிலும் நேர்மாறானது. அரசு நடத்தும் இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் தரத்தை எட்டிப்பிடிக்க பபாசிக்குக் குறைந்தது ஒரு நூற்றாண்டுக் காலம் பிடிக்கலாம். இப்போது உள்ள பபாசி நிர்வாகிகளும் அவர்களது சிந்தனைப் போக்கும் அப்போதும் அப்படியேதான் இருப்பார்கள் என்றால், நூறாண்டுகளுக்குப் பிறகும் அது தனது அவல நிலையில் மாற்றமின்றி அப்படியே தொடரும்.
நிற்க. சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சிக்கு இது மூன்றாவது வருடம். கடந்த 2023 ஆம் ஆண்டு இது தொடங்கியது. முந்தைய இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை அதிக நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் வந்திருந்தார்கள். அதிக அளவில் புத்தகங்களுக்கான மொழி மாற்றுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகச் சொன்னார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் செய்யாத ஒரு பெருஞ்செயல் இங்கே சாத்தியமாகியிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்பதில் சந்தேகமில்லை.
Add Comment