இரானின் மூன்று அணு ஆயுதத் தளங்களின் மீது ஞாயிற்றுக் கிழமை தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. மறுநாள் கத்தாரில் உள்ள அமெரிக்க இலக்குகளை இரான் தாக்கியது. ஒருநாள் இடைவெளி விட்டுப் போர் நிறுத்தம் செய்தாகிவிட்டது. நானே செய்து முடித்தேன் என்று தனது வழக்கப்படி அமெரிக்க அதிபர் சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கு முன்பே அறிவித்தார். ஆமென் என்றது இஸ்ரேல். இல்லை என்றது இரான். யாரால் நடந்தால் என்ன? போர் நின்றால் போதுமென்றது உலகம். பிறகும் தணியாமல் தாக்குதல் தொடர்வதாகச் செய்தி நிறுவனங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. எப்படியும் நிற்கும். அது நாடகத்தின் முடிவா இடைவேளையா என்பது மட்டும்தான் கேள்வி.
பன்னிரண்டு நாள் போர் என்று டிரம்ப் அறிவித்த இந்த இரான்-இஸ்ரேல் போருக்குப் பின்னால் விரிவான திட்டம் ஒன்றிருப்பதைக் கவனிக்க முடியும். கடந்த அக்டோபர் மாதம் ஏழாம் தேதி அன்று இஸ்ரேல் இந்த அலங்கோலத்தின் முதல் புள்ளியை வைத்தது. ஹமாஸை அழிக்கப்போகிறேன் எனத் தொடங்கி லெபனான், சிரியா, யேமன் எனப்பல நாடுகளில் இரான் ஆதரவில் செயல்பட்டுக் கொண்டிருந்த இயக்கங்களைத் தாக்கியது இஸ்ரேல். போதுமான அளவுக்கு அவர்கள் பலவீனமடைந்துவிட்டதை உறுதி செய்த பிறகே இரான் பக்கம் திரும்பியது. நேரடித் தாக்குதலை ஆரம்பித்தது.
மற்ற நாடுகளைவிட காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் மூலம் உயிரிழந்த பொதுமக்கள் எண்ணிக்கை மிக அதிகம். தினம் தினம் அப்பாவிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். உலகம் முழுக்க எதிர்ப்பு கிளம்பியபோதும் இஸ்ரேலைத் தடுக்க முடியவில்லை. இரான் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருந்த நேரத்திலும் காஸாவில் ஏவுகணைகள் பாய்வது நிற்கவில்லை. ஆயுதங்களால் பலியாவது மட்டுமின்றி நோய்களாலும் பசியாலும் தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் மடிகின்றனர். மண்ணை அள்ளித் தின்னும் சிறுவனை மனசாட்சி இன்றிக் கடக்கிறது சர்வதேசச் சமூகம்.













Add Comment