காங்கோ ஜனநாயகக் குடியரசு. ஆப்பிரிக்கக் கண்டத்தில் அல்ஜீரியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நாடு. சுமார் 2.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. 100 மில்லியனுக்கும் மேலான மக்கள் இங்கு வாழ்கிறார்கள். காங்கோவின் தலைநகரம் கின்சாஷா. காங்கோ ஒருகாலத்தில் பெல்ஜியத்தின் காலனியாக இருந்தது. 1960ஆம் ஆண்டில்தான் சுதந்தரம் பெற்றது. இந்நாட்டின் தற்போதைய அதிபர் பெலிக்ஸ் சிசெகெடி.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் பதினெட்டு ஆண்டுகள் அதிபராக இருந்தவர் ஜோசப் கபிலா. அவர் மீது கின்சாஷா நகரில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் அரசியல் துரோகம், போர்க் குற்றம், மனித உரிமை மீறல் போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டு, குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. செப்டம்பர் 30ஆம் தேதி ஜோசப் கபிலா நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பு ஆப்பிரிக்க அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜோசப் கபிலா, காங்கோ குடியரசின் முன்னாள் அதிபர் லாரெண்ட் கபிலாவின் மகன். லாரெண்ட் கபிலா 2001ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். தந்தையின் திடீர் படுகொலை ஜோசப் கபிலாவின் அரசியல் பிரவேசத்துக்கு வித்திட்டது. 2001ஆம் ஆண்டு தன் இருபத்தொன்பதாம் வயதில் காங்கோவின் அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் பதவியேற்ற நேரம் காங்கோவில் இரண்டாவது உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்தது. நாட்டின் அமைதியே தனது முதன்மைக் குறிக்கோள் என்று அறிவித்தார் கபிலா. பல கிளர்ச்சிக் குழுக்களுடனும், உகாண்டா, ருவாண்டா போன்ற நாடுகளுடனும் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இதனால் காங்கோவின் நீண்டகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.














Add Comment