மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத அதிகாரத்தை எதிர்த்து என்னவெல்லாம் செய்ய முடியும்? ஆயுதம் ஏந்திப் போராடலாம். அகிம்சை வழியில் போராடலாம். நீதிமன்றத்தை நாடலாம். ஊடகங்களில் விவாதிக்கலாம். அல்லது அமெரிக்க செனட் அவையில் ஓர் அதிநீண்ட உரையின் மூலமாகவும் மிக அழுத்தமாக எதிர்ப்பைப் பதிவு செய்யலாம். கோரி புக்கர் (Cory Booker) என்ற அமெரிக்க செனட் உறுப்பினர் சென்ற வாரம் அதைத்தான் செய்தார்.
அதிபர் டானல்டு டிரம்பின் கொள்கைகளையும் ஆட்சியையும் மிகக் கடுமையாகக் கண்டித்து, ஒரு மணி இரண்டு மணி நேரமல்ல, தொடர்ந்து இருபத்தைந்து மணி நேரத்திற்கும் மேலாக ஒரு மராத்தான் உரையாற்றி வரலாற்றுச் சாதனை படைத்தார். அமெரிக்க செனட் அவை விதிமுறைகளின்படி தலைமை அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செனட் உறுப்பினர், அவர் விரும்பும் வரை கால வரம்பின்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உரையாற்றலாம். ஆனால் அவர் உட்காராமல், நின்று கொண்டே தொடர்ந்து பேச வேண்டும். உரையைத் தொடங்கி முடிக்கும் வரை நிற்கும் இடத்தை விட்டு வேறெங்கும் எதற்காகவும் (இயற்கைத் தொந்தரவுகள் உட்பட) செல்லக்கூடாது. கோரி புக்கர் (வயது 56) ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு, ஆக்ஸ்ஃபோர்டு, மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் படித்தவர். 2013ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க செனட்டின் நியுஜெர்சி மாகாண உறுப்பினராக இருக்கின்றார். அதற்கு முன் நெவார்க் நகரத்தின் மேயராக இருந்த அனுபவம் பெற்றவர். 2020ஆம் ஆண்டு அதிபருக்கானத் தேர்தல் களத்தில் குதித்து பாதியில் வெளியேறியவர்.














Add Comment