வெளிநாட்டுக்குத் தாற்காலிக வேலைக்குச் செல்பவர்களை எக்ஸ்பேட் என்று அழைப்பார்கள். இவர்கள் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அல்லது முக்கியமான பொறுப்பில் உள்ளவர்களாக இருப்பது வழக்கம். பணியைப் பொறுத்து இவர்கள் செல்லும் இடம் தீர்மானிக்கப்படும் என்றாலும், பெரும்பாலானவர்களின் விருப்பம் கோஸ்டா ரிக்காவாக இருக்கிறது என்று ஓர் ஆய்வு சொல்கிறது. மேலும், அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளை விட கோஸ்டா ரிக்காவுக்கு மவுசு அதிகம் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் பசிபிக் பெருங்கடலையும், மறுபக்கம் கரீபியன் கடலையும் கொண்ட சொர்க்கப் பூமி கோஸ்டா ரிக்கா. வட அமெரிக்காவுக்கும் தென்னமெரிக்காவுக்கும் ஒரு நீண்ட இயற்கையான பாலம் உண்டு. இந்தப் பாலத்தை இஷ்த்மஸ் என்பார்கள். இப்பாலத்தில் பெலிஸ், கோஸ்டா ரிக்கா, ஹொண்டுராஸ், எல் சால்வடோர், பனாமா, குவாட்டமாலா, நிகரகுவா என்று எழு நாடுகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.
ஓவியத்தில் வண்ணம் தீட்டினாற்போல பசுமையான பச்சை மழைக்காடுகள், பச்சையும், நீலமும் கலந்த வெப்பமண்டலக் கடல், கொட்டிக்கிடக்கும் வன விலங்குகள். இவை பெரும்பாலான கரீபியன் நாடுகளுக்குக் கிடைத்த பரிசு என்றாலும், இந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தாத பல நாடுகளே இந்த நிலப்பரப்பில் உள்ளன. ஆனால் கோஸ்டா ரிக்கா அப்படியல்ல. இயற்கை வளங்களுடன் நிலையான ஊழலில்லா அரசாங்கம், குறைந்த குற்ற விகிதங்கள், பன்னாட்டுப் பள்ளிகள், நவீனத் தனியார் மருத்துவமனைகள் மற்றும் உயர்தர அரசு மருத்துவமனைகள் என்று பாதுகாப்பும், வசதிகளும் கொண்ட நாடாக விளங்குகிறது.
Add Comment