ஐரோப்பிய நாடான டென்மார்க் தன்னுடைய நானூறு ஆண்டுகள் பழமையான கடித அஞ்சல் சேவையை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் கடித அஞ்சல் முறையை நிறுத்திய முதல் நாடாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தனது கடைசி கடிதத்தை விநியோகித்தது டென்மார்க் அரசின் அஞ்சல் சேவை நிறுவனமான போஸ்ட் நோர்ட்(Post Nord).
தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாகத் தொலைபேசி, திறன் பேசி, இணையம் என அடுத்தடுத்து உலகம் சுருங்கிப்போன காரணத்தால் தற்போது கடிதப் போக்குவரத்து முறை மிகவும் அரிதாகிவிட்டது. இந்த டிஜிட்டல் யுகத்தில் தாக்குப்பிடிக்க முடியாத அஞ்சல் துறை உலகெங்கும் மெல்ல மெல்லத் தனது சிறப்பையும் முக்கியத்துவத்தையும் இழந்து கொண்டிருக்கிறது.
டென்மார்க் அரசின் அஞ்சல் துறை உலகின் பழைமையான அஞ்சல் சேவைகளில் ஒன்று. 1624ஆம் ஆண்டு அரசர் நான்காம் கிறிஸ்டியனால் அந்நாட்டில் அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது.1851ஆம் ஆண்டில், நிர்ணயிக்கப்பட்ட விலையுடன் கூடிய தபால் தலைகள் அறிமுகம் ஆயின. 2009ஆம் ஆண்டு டென்மார்க் அரசின் பொது அஞ்சல் சேவை, ஸ்வீடன் அரசின் அஞ்சல் சேவையுடன் இணைந்து போஸ்ட் நோர்ட் என்ற பொது அஞ்சல் சேவை நிறுவனமாக உருவானது. கடித சேவை பல நூற்றாண்டுகளாக டென்மார்க் நாட்டின் தகவல்தொடர்புக்கு முதுகெலும்பாக இருந்தது. ஃபிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளைப் போல டென்மார்க்கிலும் கடிதங்கள் அனைத்து வேலை நாட்களிலும் விநியோகிக்கப்பட்டு வந்தன.















Add Comment