மதுரையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து எனக்குத் தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தன. வீட்டில் பாம்பு இருக்கிறது, வந்து அதையும் காப்பாற்றுங்கள், எங்களையும் காப்பாற்றுங்கள் என்று. நானும் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் சென்று பார்த்தேன். அந்தப் பாம்பு எங்கே இருக்கிறது என்றே கண்டுபிடிக்க முடியாது. வீடு முழுக்கத் தேடித் திரும்புவேன். கடைசியாக ஒரு முறை அவர்கள் அழைத்தபோது இந்த முறை அதைப் பிடிக்காமல் வரக் கூடாது எனக் குடும்பத்துடன் கிளம்பி அந்த வீட்டிற்கு சென்றோம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத் தேடல். இரவு ஒரு மணி. அப்பொழுது தான் தெரிந்தது. அந்த வீட்டில் சமையல் அறையில் உள்ள காஸ் அடுப்பின் அடியில்தான் அது அவ்வளவு நாளும் பதுங்கி இருந்திருக்கிறது. இவர்களும் அதைக் கவனிக்கவில்லை. பாம்போடு சேர்ந்து அவர்களும் அதைப் புழங்கி வந்துள்ளனர். அந்த வீட்டினர் பீதியின் உச்சத்திற்கே சென்று விட்டனர். எனக்கும் இதுவொரு மலைப்பான அனுபவமாக இருந்தது. அது எவ்வளவு நாள் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தது என்பதுகூடத் தெரியவில்லை. இதுவரை எனது அனுபவத்தில் இந்த ஆறடி நீள நல்லப்பாம்பைப் பிடித்ததுதான் சவாலாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருந்தது.
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் சகாதேவன். இவருடைய முழு நேரத் தொழில் இரண்டு சக்கர மெக்கானிக்., பகுதி நேரத்தொழில் பாம்பைப் பிடிப்பது. இப்பொழுது இது முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. இவரது தாத்தா பாம்புக் கடிக்கு மருந்து கொடுத்துக் காப்பாற்றிய மருத்துவராக இருந்திருக்கிறார். பத்து வயதிலிருந்து இவருக்குப் பாம்புகளுடனான தொடர்பும் அனுபவமும் ஏற்பட்டிருக்கிறது. ‘அழைக்கும் மக்கள் அனைவரும் ஏன் வந்து பாம்பை அடியுங்கள் என்று கேட்கிறார்கள் பிடியுங்கள் என்று கேட்கமாட்டேன் என்கிறார்கள்?’ என்பது அந்தச் சிறுவனின் கேள்வி. அதற்குப் ‘பாம்புகள் என்றாலே விஷம், மரணம். இந்த இரண்டும்தான் மக்கள் மனதில் ஆழப் பதிந்து இருக்கிறது. பொதுவாகவே பாம்புகள்குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை. நீ வேண்டுமானால் அதைப் பிடிக்கக் கற்றுக் கொள்’ எனச் சொல்லி விஷமுள்ள, விஷமற்ற பாம்புகளின் வித்தியாசங்களை விளக்கியுள்ளார்.
Add Comment