திங்கள்கிழமை காலை, வீட்டில் காப்பிப் பொடி தீர்ந்துபோய் விடுகிறது. தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சிக் கடைக்குப் போய் வாங்கி வரலாம். நெஸ்காபி விலை 650. பல்லு கூட விளக்காமல் அரை டவுசருடன் போவதில் ஒன்றும் சிக்கலில்லை. ஆனால் அரைத்தூக்க நிலை நீங்கி விழிப்பு வந்து நடப்பதற்கே காப்பி இருந்தால்தான் சாத்தியம். திறன்பேசியைத் திறந்தால் ஒன்றுக்குப் பல கடைகள் டெலிவரி கொடுக்கத் தயாராக இருக்கும். ஆர்டர் போட்டால் 530 ரூபாய்க்கே நெஸ்காபி கிடைக்கும். அடுப்பைப் பற்றவைத்துத் தண்ணீர் கொதிப்பதற்குள் காப்பித்தூள் வந்து சேர்ந்தது. ‘ரேட்டிங் போட்டுருங்க சார்’, என்று சொல்லிவிட்டு மாயமானார் டெலிவரி பிரதிநிதி. அடடா எவ்வளவு வசதியாகப் போயிற்று என்று ஆனந்தம் கொள்ள முடியாதபடி இதற்குக் கட்டுப்பாடு விதிக்க வழக்கு ஒன்று வந்திருக்கிறது.
அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. அடிமாட்டு விலைக்குப் பொருள்களை விற்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. ஸ்விக்கி, சொமேட்டோ, செப்டோ போன்ற விரைவு வணிக நிறுவனங்கள் இதில் சிக்கியுள்ளன.
முதலில் இந்திய வணிகப் போட்டி ஆணையம் இவ்வழக்கை ஆய்வு செய்யும். அதன் பிறகு விசாரணைக்கு உட்படுத்தும். அண்மைக் காலங்களில் சிறுவணிகர்கள் மிகவும் சுரண்டப்படுவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தவிர, உணவு விநியோகத்துறையிலும் இந்நிறுவனங்கள் இதே விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளன.
Add Comment