ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திடீர் திடீரென்று ஏதாவதொரு சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பெரும்பாலும் புதுமையான திட்டமாக இருக்கும். இது பலகால வழக்கம். இப்போது சுற்றுலா மட்டுமல்ல; மக்கள் நெஞ்சைத் தொடும் விதமான வேறு பல நலத்திட்டங்களும் ஆண்டுக்கொன்றாவது அறிமுகமாகின்றன. அறிமுகமாவது பெரிதல்ல. அவை அரசாங்கமே எண்ணிப் பார்க்காத அளவுக்கு வெற்றியும் பெறுகின்றன என்பதுதான் சிறப்பு.
இந்த வருடம் ‘தந்தையர் நிதி’ (Fathers’ Endowment) என்றொரு திட்டம் வந்திருக்கிறது. இதற்காகத் திரட்ட வேண்டிய இலக்கு நிதியாக 1 பில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் 330 கோடி) நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் திட்டத்தின் விவரமும் நோக்கமும் மக்களுக்குச் சென்று சேர்ந்ததும், யாரும் நம்ப முடியாத விதமாக ஒரே மாதத்தில் இலக்கைவிட மூன்று மடங்கு நிதி சேர்ந்திருக்கிறது.
நம்ப முடியவில்லை அல்லவா? ஆனால் உண்மை அதுதான். இந்தத் ‘தந்தையர் நிதி’ திட்டத்தின் முக்கிய நோக்கம், இலவச மருத்துவம் சார்ந்தது. உலகளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பல கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கு இந்த நிதி உதவும். நாடு, இன, மொழி பேதமெல்லாம் இதற்குக் கிடையாது. முற்றிலும் மனிதநேயம் சார்ந்த முன்னெடுப்பு. குறிப்பாக வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு உதவுவதே இதன் தலையாய நோக்கம்.
Add Comment