கனடா, கிரீன்லாந்து, பனாமா, காஸா என்று அனைத்திற்கும் ஆசைப்படும் டிரம்புக்கு, பலஸ்தீன் என்ற சரித்திர பூமியின் பின்புலம் அவசியமில்லாத ஒன்று. இந்த உலகத்தில் நடந்த மிகப் பெரும் நில அபகரிப்பின் வலிகளும், போராட்டங்களும் தேவையில்லாத ஒன்று. வரலாறு நெடுகிலும் நடந்த யுத்தங்களும், பலியான லட்சக்கணக்கான உயிர்களும், சிந்தப்பட்ட லிட்டர் கணக்கான ரத்தமும் புறக்கணிக்கத்தக்க ஒன்று. ‘நிலத்தைப் பார்த்தல், டீல் பேசுதல், வாங்குதல் அல்லது குத்தகைக்கு எடுத்தல்’ என்ற தன் ரியல் ஸ்டேட் பிஸ்னஸை அப்படியே காஸா விடயத்திலும் பிரயோகிக்கப் பார்க்கிறார் டிரம்ப்.
பொதுவாய் அமெரிக்காவின் அதிபர்கள் அத்தனைபேருமே இஸ்ரேலுக்கு, இஸ்ரேலின் யுத்தக் குற்றங்களுக்கு முழு அனுசரணை வழங்கி ஆதரிப்பவர்கள்தான் என்றாலும் தான் ஒரு போர்ப்பிரியர் அல்ல என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் டிரம்ப் காஸாவை அபகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் யாருமே எதிர்பாராத ஒன்று. பலஸ்தீனத்திற்கு எதற்கு குண்டு போட்டுக் கொண்டு இருக்க வேண்டும். ஒரேயடியாய் அங்கே இருக்கும் இருபத்து மூன்று லட்சம் மக்களை ஜோர்தானுக்கும் எகிப்துக்கும் துரத்திவிட்டால் நிம்மதி என்று நினைக்கிறார் அவர். தான் காஸாவைப் புனரமைக்கப் போவதாகவும், சுவர்க்கத்தைக் கட்டி முடித்ததும் காஸாவாசிகள் விரும்பினால் வந்து குடியேற முடியும் என்றும் அடித்துவிடுகிறார்.
மேலும் காஸா மக்களுக்கு நிரந்தரமான மகிழ்ச்சியையும் நிம்மதியான வாழ்க்கையையும் கொடுக்க இந்த அவனியில் தான் அவதரித்து இருப்பதாகவும் காஸா வாசிகள் சுடப்பட்டோ, கத்திக் குத்துக்கு இலக்காகியோ உயிரிழக்க இனித் தேவை ஏற்படாது என்றும் திருவாய் மலர்ந்து புல்லரிக்க வைக்கிறார். சரி, அவரே சொன்ன இந்தக் கொலைப் பாதகங்கள் யாரால், என்ன காரணத்துக்காக ஏற்படுகின்றன என்றோ, பலஸ்தீனர்களின் நூற்றாண்டு காலமாய் தொடரும் அவல வாழ்வுக்கு அமெரிக்காவின் தார்மீகப் பங்களிப்பு பற்றியோ எதுவும் அவர் சொல்லவில்லை. ’ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது’ என்பதன் நவீன வர்ஷனாய்தான் டிரம்பின் காஸா மீதான கவலையை நோக்க வேண்டியிருக்கிறது.
Add Comment