தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். பேட்டரி தயாரிக்கப் பயன்படும் லித்தியம் என்ற கனிமமும் தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் படிமங்களாக இருக்கின்றன என்று அவர் கூறியிருக்கிறார். இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் 175ஆம் ஆண்டுவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார் செய்தியாளர்களிடம் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் போர்ச் சூழலும் பொருளாதார மந்தநிலையும் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தங்கம் ஒரு நிலையான முதலீடு. எனவே பொருளாதார பாதுகாப்புக்கு உலக நாடுகள் அனைத்தும் தங்கத்தில் முதலீடு செய்கின்றன. ஏற்கனவே இருப்பில் உள்ள தங்கத்தைப் பாதுகாக்கின்றன. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் தங்கம் இருந்தால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கிமு4000ஆம் ஆண்டு முதல் தங்கம் பயன்பாட்டில் உள்ளது. கிமு1500 வரை ஆபரணங்களும் வழிபாட்டுச் சிலைகளை உருவாக்கவும் மட்டுமே தங்கத்தைப் பயன்படுத்தினார்கள். எகிப்தில் உள்ள நூபியாவில் தங்கம் கிடைத்தது. அதனால் அதிகப் பயனடைந்தது பண்டைய எகிப்தியப் பேரரசு. சர்வதேச வர்த்தகத்திற்கான முதல் அதிகாரப்பூர்வ பரிமாற்றப் பொருளாகத் தங்கத்தை பயன்படுத்தியதும் எகிப்துதான்.
Add Comment