அதுவொரு மழைக்காலம். அந்தப் பெண்ணிற்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. தன் தொகுதி மக்களுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று அந்தப் பிரபல அரசியல்வாதி தன் கட்சி அலுவலகத்தில் இலவச வகுப்பு நடத்தினார். அவள் வீட்டிற்கு அடுத்தத் தெருவில்தான் அந்தப் பயிற்சி மையம் நடந்தது. ஆனால் அவளுக்கு அப்போதுதான் குழந்தை பிறந்திருந்ததால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.
அது வி.ஏ.ஓ. தேர்வு. அவள் வினாடிவினா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன் பால்ய கால ஆர்வ அனுபவங்களால் மட்டுமே அந்தத் தேர்வை எதிர்கொண்டாள். வெற்றிபெறவில்லை. ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு மிக நெருக்கமான மதிப்பெண்ணை வாங்கியிருந்தாள். அந்தக் குழந்தைக்கு பத்து மாதம் ஆகும் போது அடுத்த போட்டித் தேர்வு வந்திருந்தது. ‘இதுதான் உனக்கான வாய்ப்பு, ஓடு’ என்று அவள் பெற்றோர் வீட்டில் கொளுத்திப் போட்டார்கள். அவள் வாழும் வீட்டில் அவள் பெற்ற முதுகலைப் பட்டத்திற்கே முனகிக்கொண்டிருந்தார்கள்.
இந்த முறை அந்த இலவசம் வீட்டருகே நடக்கவில்லை. பயிற்சி மையத்தைத் தேடி ஒருமணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அங்கிருந்து இன்னொரு வாகனம் பிடித்து பயிற்சி மையத்தை அடைய வேண்டும். பயிற்சிக்குச் சில ஆயிரங்கள் பணம் கட்ட வேண்டும்.
அவளுக்கோ வீட்டில் பணம் கேட்கத் தயக்கம். பயிற்சி மூன்று மணி நேரம், போய் வர மூன்று மணி நேரம். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும். குடும்ப வேலைகள் பாதிக்கும். முதல் குழந்தையைப் பள்ளியில் விட்டு அழைக்கும் சமாச்சாரம் வேறு இருக்கிறது.
விசாரித்து விட்டு வருகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு பயிற்சி மையம் சென்றாள். அங்கே நூற்றுக்கணக்கானவர்கள் படிப்பதைப் பார்த்து குழந்தையையோ பணத்தையோ காரணமாக்கக் கூடாது என்று நினைத்தாள். வீட்டிற்கு வந்து கணவனிடம், அம்மா வீட்டில் கொடுத்த பணத்தில் சேர்ந்துவிட்டதாகச் சேராமலேயே பொய் சொன்னாள். தினமும் பேருந்துச் செலவை மட்டும் நீங்கள் பார்த்துக் கொண்டால் போதும் என்றாள்.
sirappu madam