டிவி சீரியல் பார்த்து அழுது கொண்டும், ஓடிடி படங்களைப் பார்த்துக் கொலை காண்டாகியும் கொண்டிருந்த ஒரு தினத்தின் முன்மதியத்தில் எனக்குச் சில அசம்பாவிதத்தின் அறிகுறிகள் தெரிந்தன. காலையிலேயே என் காலிலொரு பல்லி விழுந்து, அல்பாயுசில் மிதிபட்டு இறந்து போனது. இடக்கண் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தது. நேற்றுத்தான் நல்ல மழை பெய்திருந்ததாகையால், குளிர் காற்று வேறு. (நான் துணி துவைக்கிற நாளெல்லாம் நிச்சயம் மழை பெய்யும் என்பது என்னப்பன் தலையில் எழுதி அனுப்பியது. நேற்றுத் துவைத்திருந்தேன்.) என்னவோ சரியில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த போதே வீட்டினுள் திடும்பிரவேசமானான் என் நண்பன் இக.
“யோவ் பாலா.. கௌம்புய்யா, புத்தகக் கண்காட்சிக்குப் போகலாம்…” என்று அவன் உரக்கக் குரல் கொடுத்ததுமே, நான் ஐயங்கொண்டது சரியென்பது ஊர்ஜிதமானது. “இன்னிக்கு வேணாண்டா. பாரு, இப்பவும் மழை வர்ற மாதிரிதான் க்ளைமேட் இருக்கு” என்று நான் நழுவப் பார்த்தது பயனளிக்கவில்லை. என்னை கதறக் கதற இழுத்தான் அவன் வந்திருந்த முச்சக்கரத் தானியங்கியை (அதாங்க, ஆட்டோ) நோக்கி.
அவன் இழுக்கும்போதே, அவசர அவசரமாக என் குளிர்க் கண்ணாடியையும் தொப்பியையும் எடுத்து அணிந்து கொண்டேன். இடது கண் வேறு அடிக்கடி சிமிட்டிக் கொண்டிருக்கிறது. பு.க.வில் எதிர்ப்படும் எவளேனும் தவறாய்ப் புரிந்து கொண்டு கன்னத்திலொன்று கொடுத்து விட்டால் என்னாவது..? (கையால் தாங்க.) நான் குளிர்க் கண்ணாடி அணிவதன் ரகசியங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று என்பதை இந்நேரம் புத்திசாலிகளான சில நேயர்கள் கண்டுபிடித்திருக்கக் கூடும்.
Add Comment